

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ராமமூர்த்தி கூறினார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவது குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கு சென்னை பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடந்தது. வழக்கறிஞர் பு.பாலகோபால் அறக்கட்டளை, சென்னை பல்கலைக்கழக அரசியல் நிர்வாகத் துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கருத்தரங்கை தொடங்கிவைத்து சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ராமமூர்த்தி பேசியதாவது:
வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த நிலை மாறவேண்டும். தற்போது அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை முழுமையாக அமலுக்கு வரவேண்டும்.
மேலும், வன்கொடுமை புகார்கள் மீது உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது. வன்கொடுமை தொடர்பான புகார்கள் மீது 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இதற்கு போலீஸார், இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமமூர்த்தி கூறினார்.
கருத்தரங்கு ஏற்பாட்டாளர் வழக்கறிஞர் சுரேஷ்பாபு பேசும்போது, ‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகள் ஆகியும் பெரிய அளவில் அதில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது’’ என்றார்.
முன்னாள் மத்திய அரசு செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன், இந்திய சமூக அறிவியல் ஆய்வு மன்றத்தின் தேசிய ஆய்வறிஞர் ஹரகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.