Published : 08 Jan 2018 09:24 AM
Last Updated : 08 Jan 2018 09:24 AM

நாங்களும் ஆன்மிக அரசியல்தான் செய்கிறோம்: சசிகலா சகோதரர் திவாகரன் கருத்து

‘நாங்களே இப்போது ஆன்மிக அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், வெளியில் சொல்வதில்லை’ என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நல்லவிதமான, பொய், புரட்டு இல்லாத அரசியல் என்ற நோக்கத்தில் ஆன்மிக அரசியல் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். நாங்களே இப்போது ஆன்மிக அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், வெளியில் சொல்வதில்லை.

இந்த ஆட்சிக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவிக் காலம் உள்ளது. ஜெயலலிதாவின் உழைப்பால் அமைந்த இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதை முறையாக கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.

இப்போது இந்த அரசு அனைத்திலும் ஸ்தம்பித்து போய்விட்டது. குறிப்பாக, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் பிரச்சினைகளை முன்கூட்டியே பேசித் தீர்த்திருக்க வேண்டும். இதை பேசி முடிக்காமல் நீதிமன்றம் செல்வது என்பது பத்தாம்பசலித்தனமாகத் தெரிகிறது.

டிடிவி.தினகரன் வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை. டூயட் பாடித் திரிந்துவிட்டு திடீரென அடுத்த முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுவோர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. எம்ஜிஆரைத் தவிர வேறு யாருக்கும் இந்த முயற்சி தற்கொலைக்கு சமமானது.

கமல் கருத்தைப் பொருத்தவரை, அவருக்கு பொறுமை இல்லை, விரோதத்துடன் பதிவிடுகிறார் என்பது தெரிகிறது. குறிப்பாக, தலைமைக்கு அவர் லாயக்கற்றவர். முதலில் கமல், தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். சட்டப்பேரவை கோயிலுக்கு நிகரானது. எனவே, டிடிவி தினகரன் சட்டப்பேரவையில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றார்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக தினகரன் மாற்று இயக்கம் தொடங்க உள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, ‘எங்களுக்கும் நடக்க கால்கள் வேண்டும் என்பதற்காக தற்காலிக ஏற்பாடு செய்வதற்கு சாத்தியக்கூறு இருக்கும். தற்போது உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்றுத்தான் செயல்பட்டு வருகிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x