Published : 21 Nov 2023 04:04 AM
Last Updated : 21 Nov 2023 04:04 AM

சிவகங்கை | விஏஓவை தாக்கியோரை கைது செய்யாததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

சிவகங்கை: சிவகங்கை அருகே மண் கடத்தலைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியோரை கைது செய்யாததைக் கண்டித்து காளையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காளையார் கோவில் வட்டம் பூவாளி குரூப் கிராம நிர்வாக அலுவலர் சேகர். கடந்த நவ.2-ம் தேதி ஏனாபுரம் புதுப்பட்டி பகுதியில் சிலர் மண் அள்ளுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர், இயந்திரம் மூலம் லாரியில் கிராவல் மண் அள்ளி கொண்டிருந்தவர்களை தடுத்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் சேகரை தாக்கி விட்டு லாரி, இயந்திரங்களை எடுத்துக்கொண்டு தப்பினர். இதில் காயமடைந்த சேகர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

2 வாரங்களுக்கு மேலாகியும் மற்றவர்களை கைது செய்யாத நிலையில், அதிருப்தி அடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார்.

செயலாளர் ராமச் சந்திரன், பொருளாளர் தினேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் ராஜ ரத்தினம் மற்றும் போலீஸார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x