கும்பகோணம் | மக்களுக்கு தொல்லை கொடுத்த 15 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத் துறையினர்
கும்பகோணம்: பாபநாசம் அருகே கூடலூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 15 குரங்குகளை வனத் துறையினர் நேற்று கூண்டுகளை வைத்துப் பிடித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக் காடு கிராமங்களில் சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தன. அவை வீடுகளுக்குள் புகுந்து உணவு பண்டங்களை தின்பதும், தூக்கி எறிவதுமாக இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து தஞ்சாவூர் வனத் துறை அதிகாரிகளுக்கு ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வனத் துறையின் பாபநாசம் பிரிவு அலுவலர் ரவி, வனக்காப்பாளர் சண்முக வேல், தோட்டக் காவலர்கள் ஜெய பால், சசிகுமார் ஆகியோர் நேற்று முதல் கட்டமாக கூடலூர் கிராமத்தில் கூண்டுகளை வைத்து, 15 குரங்குகளைப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இதனால், நிம்மதியடைந்த அப்பகுதி மக்கள், வனத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
