

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் காவேரி பூம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘கலைஞரின் பாதையில் ஒரு பயணம்’ என்ற பெயரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பெருமை மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்து கொள்வதற்காக, மாணவர்களுக்கான சுற்றுலா வாகனத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கூறியது: மாணவர்கள் கல்வியுடன், வரலாற்றுச் சின்னங்களை தெரிந்து கொள்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும். 15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது பூம்புகார் நகரம். ஒரே நாளில் 70 கப்பல்கள் நிறுத்தக்கூடிய அளவுக்கு முன்பு துறைமுகம் அமைந்திருந்தது. சங்கத் தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை போன்றவற்றில் இங்கு வாணிபம் நடந்த சிறப்பு பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இந்த பெருமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கருணாநிதியால் இங்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பள்ளி மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களை காண்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்படும் 2 வாகனங்களில் காவேரிபூம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காவேரிப்பூம்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி, வாணகிரி குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சார்ந்த 40 மாணவ, மாணவிகள் பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடம், தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம், திருக்குவளை கருணாநிதி பிறந்த இல்லம், திருவாரூர் ஆழித்தேர் மற்றும் கலைஞர் கோட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்றுவர உள்ளனர் என்றார்.
இதில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்.பி செ.ராமலிங்கம், ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீர்செல்வம், முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி, சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.