Published : 21 Nov 2023 04:08 AM
Last Updated : 21 Nov 2023 04:08 AM

திருச்சி நீதிமன்றம் முதல் அல்லித்துறை வரை ரூ.138 கோடியில் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: திருச்சி நீதிமன்றம் முதல் அல்லித்துறை வரை ரூ.138 கோடியில் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாரீஸ் திரையரங்கம் அருகே உள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து விட்டு ரூ.34.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுதல் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் அமையுவுள்ள குழந்தைகளுக்கான பொழுது போக்கு மற்றும் பறவைகள் பூங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது: திருச்சி மாரீஸ் திரையரங்கம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 157 ஆண்டுகள் கடந்து விட்டதாலும், பாலம் சேதமடைந்துள்ளதாலும், பாலத்தை உயரப்படுத்தி கட்ட ரூ.34.10 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இங்கு புதிதாக கட்டப்படவுள்ள இருவழிப் பாதை ரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.29 மீட்டர், அகலம் 20.70 மீட்டர், பாலத்தின் கிழக்குப் பகுதியில் 223.75 மீட்டர் நீளம், 15.61 மீட்டர் அகலமும், மேற்கு பகுதியில் 224 மீட்டர் நீளம், 15.61 மீட்டர் அகலமும் கொண்டதாக தடுப்புச் சுவர்களுடன் சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த பாலம் இருவழிப் பாதையாக கட்டப்படவுள்ளதால் மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து தில்லைநகர், தென்னூர், புத்தூர், உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி சுலபமாக செல்ல முடியும். இந்த பாலம் ஜூலை 2024-க்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். திருச்சியில் பெரிய அளவில் பொது மக்களுக்கான பொழுது போக்கு இடங்கள் இல்லாத நிலையில், ஆட்சியரின் விருப்பத்தின்பேரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள், வீட்டு விலங்குகள் வளர்க்கப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைஆகிய பண்டைய தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் அமைவிடங்கள், புல்வெளிகள், சிற்பங்கள், நீரூற்றுகள், பாலங்கள், வரைபடங்கள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் வந்து செல்லும் வகையிலும் பூங்காவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வயலூர் சாலைக்கு மாற்றாகரூ.138 கோடி செலவில் உய்யக்கொண்டான் கால்வாய் கரையில் நீதிமன்றத்திலிருந்து அல்லித்துறைவரை சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. ரூ.110 கோடியில் திருச்சி மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிராட்டியூர் ஏரியில் நடைபாதை, சைக்கிள் ஓடுபாதை, குழந்தைகளுக்கான பூங்கா உள்ளிட்டவை அமையவுள்ளன.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணிகள் முடியும்போது, மார்க்கெட் பணிகள் தொடங்கப்படும். அங்குள்ள 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியும் அழகுப்படுத்தப்படும். திருச்சியில் 400 ஏக்கரில் உள்ள புங்கனூர் ஏரி, 150 ஏக்கரில் உள்ள கள்ளிக்குடி ஏரி, மறவனூர் ஏரிகளை சீரமைத்து விவசாயம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா சிலையில் இருந்து கம்பரசம் பேட்டை வரை உயர் மேம்பாலம் அமைக்கும் பணி இந்தாண்டு தொடங்க உள்ளது. சிந்தாமணி பகுதியில் இருந்து ஜங்ஷன் வரை உயர் மேம்பாலம் அமையவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் போது திருச்சி சிறந்த நகரமாக காட்சியளிக்கும் என்றார்.

இதில், ஆட்சியர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x