

வேலூர்: செதுவாலை ஏரியில் நீர்வரத்து இருப்பதால் அங்கு வசித்து வரும் இருளர் சமூக மக்கள் தனியாக வீட்டுமனை பட்டா கோரி குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) அப்துல்முனீர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கலிய மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில், வேலூர் ஆர்.என்.பாளை யத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அளித்த மனுவில், ‘‘ஆர்.என்.பாளையம் பச்சையப்பன் கவுண்டர் விரிவு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள். நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை பட்டா வழங்கவில்லை. எங்கள் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரி வித்துள்ளனர்.
வேலூர் அடுத்த செதுவாலை பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கைக்குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், ‘‘மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் நாங்கள் செதுவாலை ஏரி பகுதியில் வசித்து வருகிறோம். தற் போது, செதுவாலை ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நாங்கள் வசிப்பதற்கு சிரமமாக உள்ளது. மழைக் காலங்களில் சேறும், சகதியும் வசிக்கும் நிலை உள்ளது. அந்த இடத்தில் எங்களால் கைக்குழந்தைகளுடன் வசிக்க முடியவில்லை. எங்களுக்கு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டித்தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
வேலூர் அடுத்த நம்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வேண்டா என்பவர் அளித்த மனுவில், ‘‘நான் வேலூர் விருபாட்சிபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது வங்கிக் கணக்குக்கு கடந்த 3 மாதங்களாக மகளிர் உதவித்தொகை வந்துள்ளது. மேலும், எனது மகள் திருமணத்துக்கு வங்கி கணக்கில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் பணம் உள்ளிட்டவை எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதுகுறித்து வங்கியில் சென்று கேட்டபோது, எனது வங்கிக் கணக்கு எண்ணிலே மற்றொருவருக்கு கணக்கு தொடங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டால் என்னை அலைக்கழித்து வருகின்றனர். எனது கணக்கில் இருந்து முறைகேடாக எடுக்கப்பட்ட பணத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
குடியாத்தம்-காட்பாடி சாலை கோவிந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி (45), தனது மகன்கள் பரத் (23), மணிகண்டன் (20) ஆகியோருடன் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்குக்கு வெளியே தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவர்களை தடுத்தனர். அப்போது, பெண் காவலர் ஒருவர் தவறி விழுந்ததுடன், எதிர்பாராமல் செல்வியின் இடது காதுடன் கம்மல் அறுந்து கீழே விழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
அவர்களிடம், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ‘‘எங்களுக்குச் சொந்தமான இடத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் சுவர் எழுப்பியுள்ளனர். இதனால், அருகில் உள்ள கோயில் நிலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தோம். கோயில் சார்பில் அந்த நிலத்தையும் நாங்கள் பயன்படுத்தக் கூடாது என கூறுகின்றனர். இதனால், எங்களுக்கு பாதை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் எங்களுக்கு பாதை அமைத்துத்தர வேண்டும்’’ என்றனர்.
குடியாத்தம் அடுத்த சூராளூர் கிராமத்தைச் சேர்ந்த நாக ராஜ் என்பவர் அளித்த மனுவில், ‘‘எனக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கால் அகற்றப்பட்டு செயற்கைக்கால் உதவியுடன் நடந்து வருகிறேன். என்னால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் எனக்குச் சொந்தமான நிலத்தை வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்து வந்தேன். எனது மருத்துவ செலவுக்காக 8 வீட்டு மனைகளை எனது ஊரைச் சேர்ந்தவரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றேன்.
அசல், வட்டி சேர்த்து ரூ.10 லட்சம் ஆன நிலையில் அவரது வீட்டுமனைகளை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். தற்போது, ரூ.10 லட்சம் பணம் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால், அந்த இடத்தை கொடுக்காமல் அவர் அபகரிக்க முயல்கிறார்’’ என தெரிவித்துள்ளார். மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 416 மனுக்கள் பெறப்பட்டன.