மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
குன்னூர்: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீண்ட நாட்களுக்கு பின்னர் மலை ரயில் சேவை மீண்டும் நேற்று தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3-ம் தேதி இரவு பெய்த மழை காரணமாக குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. கல்லாறு - ஹில்குரோவ் இடையே மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறை மற்றும் மரங்கள் விழுந்தன. இதனால், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலேயே மலை ரயில் நிறுத்தப்பட்டது.
பயணிகளுக்கு பயணக் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. மண் சரிவு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததால் மேட்டுப்பாளையம் - குன்னூரிடையே மலை ரயில் சேவை 5-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 8-ம் தேதியன்று ரயில் இயக்கப்பட்டது. அன்றைய தினம் இரவு கன மழை பெய்ததால், கல்லாறு, ரன்னிமேடு, ஹில்குரோவ் ஆகிய பகுதிகளில் மலை ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது.
கல்லாறு பகுதியில் ரயில் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக் கற்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதன் காரணமாக நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது. மேட்டுப் பாளையத்திலிருந்து நேற்று காலை மலை ரயில் புறப்பட்டு குன்னூர் வந்தடைந்தது. தேநீரகம் திறப்பு: மலை ரயில் பாதையில் ஹில்குரோவ், ரன்னிமேடு, குன்னூர் ஆகிய ரயில் நிலையங்களில், சுற்றுலா பயணிகள் இளைப்பாற கேண்டீன்கள் செயல்பட்டு வந்தன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தகேண்டீன்கள் மூடப்பட்டன. இதனால், மேட்டுப் பாளையத்திலிருந்து குன்னூர் வரை சுற்றுலா பயணிகள் எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் குன்னூர் வரை பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. நேற்று முதல் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் மீண்டும் கேண்டீன் திறக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
