Published : 11 Jan 2018 10:08 AM
Last Updated : 11 Jan 2018 10:08 AM

காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-க்குள் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

காமராஜர் பிறந்த நாளான வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர்கள் குமரி அனந்தன், எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கடந்த 2017 ஜூன் 7-ம் தேதி தொடங்கி இதுவரை, 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளும் வகையில் காமராஜர் பிறந்த நாளான வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

19 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு பாராட்டு, காங்கிரஸ் கட்சியின் 66-வது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தியின் கரங்களைப் பலப்படுத்தி புதிய சகாப்தம் படைக்க உறுதியேற்பது, 2ஜி அலைக்கற்றை தீர்ப்பிலிருந்து காங்கிரஸ் கட்சி, ஆட்சியின் மீது சுமத்தப்பட்ட களங்கம் நீக்கப்பட்டதற்கு வரவேற்பு, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

7 பேர் புறக்கணிப்பு

திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 7 பேர் புறக்கணித்தனர். கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர்கள், ‘‘ பெரும்பாலான இடங்களில் வாக்குச் சாவடி அளவில் காங்கிரஸுக்கு பலம் இல்லாததால் நம்மை கூட்டணிக் கட்சிகள் மதிப்பதில்லை. எனவே, வாக்குச் சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிகழ்ச்சியில் நிறைவாகப் பேசிய திருநாவுக்கரசர், ‘‘அடுத்த ஆண்டு ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் வருகிறது. மோடி அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதால் காங்கிரஸுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x