Published : 16 Jan 2018 12:34 PM
Last Updated : 16 Jan 2018 12:34 PM

கலப்பு மணம் புரிந்தோரின் பொங்கல் விழா: பாரம்பரிய விளையாட்டுகளோடு குழந்தைகள் குதூகலம்

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை பெரும்பாலும் கிராமங்களிலேயே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் கோவையில் உள்ள நகரவாசிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக கிராமங்களைத் தேடிச் சென்று பாரம்பரிய முறையில் பொங்கலைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

கோவை வீரகேரளம் அருகே உள்ள விவசாய நிலத்தில் 22-வது ஆண்டாக நேற்று பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஏராளமானோர் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். அதில் பாரம்பரிய விளையாட்டுகளான கோலி விளையாட்டு, பம்பரம் விடுதல், பட்டம் பறக்க விடுதல், உறியடித்தல், ஓட்டப் பந்தையம் உள்ளிட்டவை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. பின்னர் அவர்கள் விளையாட்டில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைத்து குடும்பத்தினரும் சாதி, மத மறுப்புத் திருமணங்களை செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த எழுத்தாளர் பாமரன் கூறும்போது, ‘விவசாயிகளையும், விவசாயத்தையும் கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் அவசியத்தை உணர வேண்டுமானால் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். நகரில் அந்த முக்கியத்துவம் தெரியாது என்பதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் கிராமங்களைத் தேடிச் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அதன் வாயிலாக, விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், கிராமங்களில் மட்டுமே உயிர்ப்போடு இருக்கும் விளையாட்டுகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடிகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் யாருமே ரத்த சொந்தங்கள் இல்லை.

சாதி, மதம் உள்ளிட்டவற்றைக் கடந்து திருமணம் செய்து கொண்ட குடும்பங்கள் மட்டுமே நட்பு வட்டத்தால் இணைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.வெளிநாடு வாழ் தமிழர்களின் குடும்பத்தினர் கூட பலர் இதில் பங்கெடுத்து வருகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x