Published : 20 Nov 2023 04:04 AM
Last Updated : 20 Nov 2023 04:04 AM
சேலம் / ஈரோடு / நாமக்கல் / ஓசூர் / தருமபுரி: சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, ஓசூர், தருமபுரியில் நடந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 99-வது ஆண்டு தொடக்க விழா, வள்ளலாரின் 201-வது ஜெயந்தி விழா, சத்ரபதி சிவாஜி முடிசூடிய 350-வது ஆண்டு விழாவை ஒட்டி, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. சேலத்தில் நடந்த ஊர்வலத்துக்கு மாவட்டத் தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மரவனேரி மாதவம் வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், அம்பேத்கர் சிலை வழியாக சங்கர் நகர், தமிழ்ச்சங்கம் சாலை வழியாக மீண்டும் மரவனேரி மாதவம் வளாகத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை முன்னிட்டு சேலம் மாநகர காவல் துணை ஆணையர்கள் மதிவாணன், பிருந்தா தலைமையில் உதவி காவல் ஆணையர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட 450-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு: அதுபோல, ஈரோடு தில்லை நகரில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மீனாட்சி சுந்தரனார் சாலை, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, காந்திஜி சாலை, காளை மாடு சிலை சந்திப்பு பகுதியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் பேண்ட் வாத்தியங்களுடன், 350-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர்.
முன்னதாக, ஊர்வலத்தை ஈரோடு கோட்ட பொறுப்பாளர் சி.டி.குமார் மற்றும் ஹீராலால் ஜெயின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வல முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில், மாநில செயலாளர் பிரகாஷ், மாவட்டத் தலைவர் ஈ.ஆர்.எம். சந்திரசேகர், நகரத் தலைவர் விஜயகுமார், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னரில், ஆர்எஸ்எஸ் ஊர் வலத்தை ஓய்வு பெற்ற எல்ஐசி அதிகாரி கே.எம்.பச்சியப்பன் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில், 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். வடக்குப்பேட்டையில் ஊர்வலம் நிறைவடைந்த நிலையில் அங்கு நடந்த பொதுக் கூட்டத்துக்கு வழக் கறிஞர் கே.ஆர்.அண்ணா மலை தலைமை வகித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஈரோடு கோட்ட செயலாளர் என்.மோகன்ராஜ் சிறப்புரையாற்றினார். ஈரோடு எஸ்பி ஜவகர் தலைமையில், 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே கூட்டம் நடந்த மேடை அருகே கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடந்த ஊர்வலத்துக்கு, ஆர்எஸ்எஸ் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். கோட்ட சங்க சாவக் சுப்பிரமணியம், ஆர்எஸ்எஸ் மாநில இணைப் பொருளாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில் தொடங்கிய ஊர்வலம் சேலம் சாலை சந்திப்பு, பெரிய பாவடி தெரு,
பூக்கடை சந்திப்பு, வன்னியர் வீதி, நகரக் காவல் நிலைய வளாகம், சங்க கிரி சாலை வழியாக மீண்டும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில் நிறைவடைந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். எஸ்பி எஸ்.ராஜேஷ் கண்ணன் தலைமை யில் 150 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலூர் அட்கோ பகுதியிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை, பத்ர காசி ஆசிரமம் ஷக்தானந்தா சுவாமி தொடங்கிவைத்தார். ஒருங்கிணைப்பாளர் சேரன் செங்குட்டுவன் தலைமை வகித்தார். ஊர்வலம் பாகலூர் சாலை, பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையை வழியாக பேருந்து நிலையம், பழைய பெங்களூரு சாலை, ஏரி தெரு வழியாக கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயில் மைதானத்தில் நிறை வடைந்தது. தொடர்ந்து, பொது கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மக்கள் தொடர்பு இணை அமைப்பாளர் ராம ராஜசேகர் பங்கேற்றுப் பேசினார். இதையொட்டி, எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தலைமையில், டிஎஸ்பி பாபு பிரசாத் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தருமபுரி: தருமபுரியில், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை, துர்க்கையம்மன் கோயில் நிர்வாகி அன்புதாசன் தொடங்கி வைத்தார். பேரணியில் 120-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி நேதாஜி புறவழிச் சாலை, நெசவாளர் காலனி வழியாக சென்று 4 ரோடு பகுதியில் திரும்பி தலைமை அஞ்சல் நிலையம் வழியாக மீண்டும் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
பேரணி முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில், அமைப்பின் சேலம் கோட்ட தலைவர் சந்திர சேகர் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில், அமைப்பு நிர்வாகிகள் முத்து, சேகர், பாண்டிய ராஜன், பாஜக, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தையொட்டி 300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT