Published : 20 Nov 2023 06:15 AM
Last Updated : 20 Nov 2023 06:15 AM

மயிலாப்பூரில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணி: லஸ் கார்னர் சாலையை மூட திட்டம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கப்பாதை பணிக்காக மயிலாப்பூர் லஸ் சந்திப்பு சாலையை மூட திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் 2-ம் கட்டமெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்படுகிறது. 3 வழித்தடங்களிலும் 2028-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் இயக்குவதை இலக்காக கொண்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் ஒன்றான, கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி (26 கி.மீ.) வழித்தடத்தில் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும், கலங்கரைவிளக்கம் - கோடம்பாக்கம் வரை சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

குறிப்பாக, கலங்கரைவிளக்கத்தில் இருந்து மயிலாப்பூர் கச்சேரிசாலை, மந்தைவெளி வழியாக சுரங்கம்தோண்டும் பணி நடைபெறுகிறது. இப்பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, தரைக்கு அடியில் உள்ள கேபிள்கள், ஆழ்குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் அடித்தள தூண்கள், மயிலாப்பூர் - மந்தைவெளி இடையே கட்டப்படும் இரட்டை சுரங்கப்பாதைக்கு இடையூறாக இருக்கிறது. இதனால், பறக்கும் ரயில்நிலையத்துக்கு அருகே பக்கிங்ஹாம் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள மதகு போன்ற கல்வெர்ட் பாலம் இடிக்கப்பட உள்ளது.

மயிலாப்பூர் லஸ் கார்னர்சாலை மூடப்பட உள்ளதால்மந்தைவெளியில் இருந்து லஸ் கார்னர் வரும் வாகன ஓட்டிகள், சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகன போக்குவரத்து திருப்பி விடப்படும் சூழலில், இடிக்கப்படும் கட்டமைப்புக்கு பதிலாக, மற்றொரு பாலம் கட்டவும் திட்டமிட்டு உள்ளனர். வேலை நடைபெறும் இடங்களில் சாலைகளை மூடுவதற்கும், வெவ்வேறு பாதையில் வாகனங்களை திருப்பி விடுவதற்கும் சென்னை போக்குவரத்து காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவனஅதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x