Published : 20 Nov 2023 06:20 AM
Last Updated : 20 Nov 2023 06:20 AM

மேற்கு வங்கத்திலிருந்து சென்னை வந்து காணாமல்போன முதியவரை கண்டுபிடித்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலர்

சென்னை: மேற்கு வங்கத்திலிருந்து சிகிச்சைக்காக சென்னை வந்தபோது காணாமல்போன முதியவரை, தலைமைக் காவலர் ஒருவர் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளார். வயதான முதியவர் ஒருவர் கடந்த 15-ம் தேதி புளியந்தோப்பு பகுதி சாலையோரம் மயங்கி கிடந்தார். தகவல் அறிந்து பேசின்பாலம் காவல் நிலைய தலைமைக் காவலர் சரத்குமார் சம்பவ இடம் விரைந்தார். பொதுமக்கள் உதவியுடன் அந்த முதியவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முதியவர் மயக்க நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததால், அவரது பெயர் விவரம் தெரியவில்லை. இதையடுத்து முதியவரை மீட்ட தலைமைக் காவலர் சரத்குமார், அந்தநபரை செல்போனில் படம் பிடித்து பேசின் பாலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த செய்யது நூர் ஜமால் (56) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது மாயமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், காணாமல் போனவரின் புகைப்படத்தையும் காவல் நிலையத்தில் கொடுத்திருந்தனர். இந்த புகைப்படம் அனைத்து காவல் நிலைய போலீஸாரின் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டது. இதை கவனித்த தலைமைக் காவலர் சரத்குமார், காணாமல் போன செய்யது நூர் ஜமாலைதான் மருத்துவமனையில் சேர்த்ததாக பூக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து புகார் தெரிவித்த செய்யது நூர் ஜமால் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை வந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்யது நூர் ஜமாலை பார்த்தனர். இதையடுத்து, அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்டு, காணாமல்போன நபரை அவரது குடும்பத்தாருடன் ஒப்படைக்க உதவிய பேசின் பாலம் காவல் நிலைய தலைமைக் காவலர் சரத்குமாரை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x