Published : 25 Jan 2018 10:33 PM
Last Updated : 25 Jan 2018 10:33 PM

சுதந்திரப் போராட்ட வீரரிடம் அதிகாரிகளின் செயலுக்காக மன்னிப்பு கேட்ட நீதிபதி: தியாகி பென்ஷனை உடனே வழங்க உத்தரவு

தியாகி பென்ஷனுக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரருக்கு உடனே வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாட்டை மீட்கப் போராடிய தங்களுக்கு, பிடிவாத அதிகாரிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று திகைக்க வைத்துள்ளார்.

இந்த வித்தியாசமான வழக்கு குறித்த விபரம் வருமாறு:

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்துள்ளார். 1945-ம் ஆண்டில் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கக் கோரி அவர் அரசுக்கு விண்ணப்பித்தார். அத்துடன், இந்திய தேசிய ராணுவத்தின் பெண் கேப்டனாக பணியாற்றியவரும், 2002-ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் வேட்பாளராக போட்டியிட்டவருமான லட்சிமி ஷெகல் பரிந்துரை கடிதத்தையும் அவர் இணைத்திருந்தார்.

ஆனால் தமிழக அரசின் விசுவாசமிக்க அதிகாரிகள் அவரது பிறந்த தேதியில் சில குற்றங்களைக் கண்டுபிடித்து அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க மறுத்துவிட்டனர். இதை அடுத்து, 89 வயது காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் வயது தொடர்பாக சில குறைபாடுகள் இருந்ததால் சில ஆவணங்களை கோரியதாகவும், அவற்றை அவர் வழங்காததால் விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, சுதந்திரப் போராட்ட வீரர் காந்திக்கு ஓய்வூதியம் வழங்கி இரண்டு வாரங்களில் உத்தரவு பிறப்பித்து, அதை நேரடியாக அவருக்கு வழங்க வேண்டும் என்றும், ஓய்வூதிய பாக்கியை கணக்கிட்டு நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், வெள்ளையனிடம் இருந்து நாட்டை மீட்க போராடிய தங்களுக்கு, பிடிவாத அதிகாரிகளாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் நீதிபதி தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதியின் மனிதாபிமான உணர்வு, தேசப்பற்று நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் திகைக்க வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x