

சென்னை: பல ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ரயில், விமானத்தில் செல்வதைவிட சாலை மார்க்கமாக காரில் பயணம்செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். திமுக இளைஞரணியில் இருந்தபோது, ஆரம்பகாலத்தில் தமிழகம் முழுவதும் காரில் பயணித்து, கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, அவரே காரை ஓட்டிச் செல்ல விரும்புவார். அரசியலில் முக்கிய இடத்துக்கு வந்த பின்னர், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கார் ஓட்டுவதை தவிர்த்தார்.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர், நேற்று தனக்கு மிகவும் பிடித்த, பழைய மாடல் ஃபியட் பத்மினி காரை சென்னை சாலைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சல், தொண்டை வலி, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததால் வீட்டில் ஓய்வில் இருந்த முதல்வர், அடையாறில் உள்ள பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்று காலை தானே காரை ஓட்டிச் சென்றார். பின்னர், பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
முதல்வர் ஓட்டிய காரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட 4 பேர் பயணித்தனர். முதல்வர் ஓட்டிய காருக்குமுன்பும், பின்பும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. முதல்வர் கார் ஓட்டிச் செல்வதை வியப்புடன் பார்த்து ரசித்த பொதுமக்கள், தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். முதல்வர் கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.