

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டாபிராமைச் சேர்ந்த எம்.கமலகண்ணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான் மருந்தாளுநர் படிப்பை கடந்த 2019-ம் ஆண்டு முடித்துவிட்டு தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் கேதாரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மருந்தாளுநராக பணியில் சேர்ந்தேன். தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் 889 மருந்தாளுநர்கள் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பை கடந்த 2022 ஆக.10-ம் தேதி வெளியிட்டது. அதன்பிறகு அந்த பணியிடங்களின் எண்ணிக்கையை 986 ஆக அதிகரித்து புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஏப்.27-ல் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னும், பின்னும் அரசு வெளியிட்ட அறிவிப்பில் கரோனா காலகட்டத்தில் பணியில் இருந்த மருந்தாளுநர்களுக்கு 5 மதிப்பெண்கள் ஊக்க மதிப்பெண்களாக வழங்கப்படும் எனக் கூறியிருந்தது. இந்நிலையில் கடந்த அக்.23-ம் தேதி மருத்துவ தேர்வு வாரியம் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் நான் 61 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இப்பணியிடங்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணாக 61.47 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்துள்ள நிலையில் எனக்கும் 5 மதிப்பெண்களை ஊக்க மதிப்பெண்களாக வழங்கியிருந்தால் நானும் மருந்தாளுநர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றிருப்பேன்.
இதுதொடர்பாக மருத்துவ தேர்வு வாரியம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனக்கு கரோனா காலகட்டத்தில் பணியாற்றியதற்கான ஊக்க மதிப்பெண் வழங்கவும், அதுவரை மருந்தாளுநர் பணியிட நியமிக்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, மருந்தாளுநர் நியமனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை வரும் டிச.14-க்கு தள்ளிவைத்துள்ளார்.