“பிரதமர் கொண்டுவரும் திட்டங்களில் கமிஷன் அடிக்க முடியாது” - நிர்மலா சீதாராமன் உறுதி
ராமேசுவரம் / விருதுநகர்: பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வரும் திட்டங்களில் யாரும் கமிஷன் அடிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமரின் தெருவோர வியாபாரிகளின் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ராமேசுவரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமிர்தா வித்யாலயம் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6,679 பயனாளிகளுக்கு வங்கிக் கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.
இதில், நிதி சேவைகள் துறைச் செயலர் விவேக் ஜோஷி, இணைச் செயலர் பிரஷாந்த் குமார் கோயல், தமிழ்நாடு மாநில வங்கி குழுமத்தின் தலைவர் அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா மற்றும் பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் ரூ.10 ஆயிரம் கடனும், அதை திருப்பிச் செலுத்தினால் ரூ.20 ஆயிரம், அதையும் திருப்பிச் செலுத்தினால் ரூ.50 ஆயிரம் என்ற எளிமையான கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறு வியாபாரிகளுக்கு க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளது. பிரதமரால் உருவாக்கப்படும் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் செல்லக்கூடியவை. இதில் யாரும் கமிஷன் அடிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் வழங்கும் விழா, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா வரவேற்றார். நிதிச் சேவைகள் துறை செயலாளர் விவேக் ஜோஷி கருத்துரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1,247 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1.71 கோடி கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும், டிஜிட்டல் பரி வர்த்தனை மேற்கொள்ளும் 4 சாலையோர வியாபாரிகளை கவுரவித்தும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த 3 பேருக்கு பதிவு சான்றிதழையும் மற்றும் 10 பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான்- 3 மாதிரியையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், அனைத்து வகையான சாலையோர விற்பனையாளர்களுக்கான பிரதமர் ஸ்வநிதி கடன் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சாமானியர்களின் முன்னேற்றத்துக்காக, நாடு முழுவதும் 116 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டமும், விருதுநகர் மாவட் டமும் இதில் அடங்கும் என்றார்.
