

புதுக்கோட்டை: தமிழக அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே காலாடிப்பட்டியில் மாற்று கட்சியில் இருந்தபலர் விலகி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர்சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது: 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் பொதுமக்கள், விவசாயிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், சத்துணவு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அடுத்து அதிமுக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 50 - 60 சதவீத மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தை திமுக அரசு திறனற்ற முறையில் கையாண்டது தான் இதற்கு காரணம். ஆண்டுக்கு 4 ஆயிரம் மருத்துவ பணியாளர்களைத் தேர்வு செய்தது அதிமுக அரசு. ஆனால், கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், ஒருவரைக் கூட பணி நியமனம் செய்யவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பது என்பது எதார்த்தம். அதை விரைந்து முடிப்பது அரசின் கடமை.
தமிழகம் முழுவதும் காய்ச்சல், சளியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான மருந்துகள் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, உயிர் காக்கும் துறையின் அமைச்சரான மா.சுப்பிரமணியன், அதிமுக ஆட்சியை குறை சொல்வதை நிறுத்திக் கொண்டு பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.