

ரஜினிகாந்த் அரசியல் வருகை அறிவிப்பை அடுத்து அவரை வரவேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்துக்குத் தேவை வலுவான தலைமை என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி 12-ம் தேதி சென்னையில் நடைபெறும் 7அப் 'நேற்று இன்று நாளை' இசை நிகழ்ச்சியை அடுத்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:
''மாநிலத்துக்கு வலுவான தலைமை வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். யார் வந்தாலும் சரி, ரஜின்காந்த் அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், இசை, கலைகளை மேம்படுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்க்கை இன்னும் மேம்பட வேண்டும். அதிசயம் நிகழ வேண்டும் என்று நான் உணர்கிறேன்'' என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மேலும் திரைத்துறைக்குள் நுழைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் சென்னை இசை நிகழ்ச்சி பற்றி கூறும்போது, ''நான் அயல்நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது, சென்னையில் எப்போது இது போன்று இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் ஏற்படும். இப்போதுதான் அதற்கு நேரம் வந்துள்ளது'' என்றார்.
நாளை மறுநாள் ஜனவரி 6-ம் தேதி தனது 51-வது பிறந்தநாளை ஏ.ஆர்.ரஹ்மான் கொண்டாடுகிறார்.