

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தென் தமிழகப் பகுதிகளில் வன்முறைகளை தடுக்க தொழிற்சாலைகளை அதிகரிக்க வேண்டும் என நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரைத்துள்ளன.
ஆனால் அதற்கு செயல் வடிவம் கொடுக்காமல் திமுக அரசு இழுத்தடித்து வருகிறது. குற்றச்செயல்களை தடுக்க காவல் துறையால் முடியும். ஆனால் ஆளுங்கட்சியினரின் தலையீடு அதிகரித்துள்ளதாலும், நடவடிக்கை எடுக்காதபடி காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாலும் குற்றங்கள் குறையாமல் உள்ளன.
இந்த நிலை மாற வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும். ஜாதிகளால் மக்களைத் துண்டாடும் முதல் குற்றவாளியாக காவல் துறை உள்ளது. ஏழை, எளிய மக்கள் மீது ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. அதனை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். அனைத்து சமூக உரிமைக்காகவும் பாடுபட்டு வருகிறோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி நிர்வாகி ஷ்யாம், சூசை, சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை தூறிக்கொண்டு இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி ஏராளமா னோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.