விசைப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிவேக டீசல் எரிஎண்ணெய் அளவை உயர்த்தி வழங்க அரசாணை வெளியீடு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மீனவளத்துறை செயலர் வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரிஎண்ணெய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே டீசல் எரிஎண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் லாபகரமானதாக இல்லை என்பதால், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் எரிஎண்ணெய் அளவை உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு பல்வேறு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

இதையொட்டி கடந்த ஆக.18-ல் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மீனவ சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மீன்பிடி விசைப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிவேக டீசல் எரிஎண்ணெய் அளவைபடகு ஒன்றுக்கு ஆண்டுக்கு 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4,400 லிட்டர் வீதமும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து முதல்வரின் அறிவிப்பை 2024-25-ம் ஆண்டு முதல் செயல்படுத்தும் விதமாக மீன்வளத்துறை சார்பில் நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 4,500 விசைப் படகு மீனவர்களும், 13,200 நாட்டுப்படகு மீனவர்களும் பயன்பெறவுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in