

சென்னை: சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்குப் பின்னர், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் களிடம் கூறியதாவது:
2012-ல் அதிமுக ஆட்சியில்தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. அதற்கு எந்த தலைவர் பெயரும் சூட்டப்படவில்லை. 2020 ஜன.9-ம்தேதி பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரைச் சூட்டும் வகையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் அனுமதி தரவில்லை.
இதற்காக அப்போது முதல்வராக இருந்த பழனிசாமியும், அதிமுகவும் எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் இந்த மசோதாக்களும் அடங்கும். ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட மசோதாக்களை எந்த மாற்றமும் செய்யாமல் நிறைவேற்றி, மீண்டும் அனுப்புகிறோம். எந்த அரசியல்காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல்மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும்என்ற மசோதாவுக்கு உயிர் கொடுத்து, மீண்டும் ஏற்றுக் கொண்டு, அவையில் முன்வைக்கும்போது தீர்மானத்தை வரவேற்கக் கூடிய தார்மீகக் கடமை எதிர்க்கட்சித் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் பேரவையில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக, பொய்யான காரணத்தைக்கூறி வெளிநடப்பு செய்துள்ளனர். இது முழுக்க அரசியல்.
கூட்டணியில் இருந்து வெளியேறியதாக கூறினாலும், பாஜகவுடனான தொடர்பின் பேரிலும், டெல்லியில் இருப்பவர்களின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவுமே வெளிநடப்பு செய்துள்ளனர்.
இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.