Published : 17 Jan 2018 12:54 PM
Last Updated : 17 Jan 2018 12:54 PM

செட்டாப் பாக்ஸ் விநியோகத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பற்றாக்குறை?

அரசியல் தலையீட்டால், தமிழக அரசின் இலவச செட்டாப் பாக்ஸ் திட்டத்தில் விநியோகம் பாதித்துள்ளதாகவும், விதிமுறைக்கு மாறாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஏப்.17-ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் உரிமம் வழங்கியது. அதன் பின்னர் கேபிள் டிவி இணைப்புகளுக்கு பதிலாக செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் உயர் தொழில்நுட்பம் கொண்ட இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் கோவையில் செட்டாப் பாக்ஸ் விநியோகத்துக்கு அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் மத்தியிலும், செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவதில் அரசியல் தலையீடுகள் இருப்பதால் போதுமான அளவில் அவை கிடைப்பதில்லை என கேபிள்ஆபரேட்டர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கூறும்போது, ‘கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸுக்கு ரூ.550 செலுத்த வேண்டும் என்கிறார்கள். கிராமப்புறமான தடாகம் பகுதியில் செட்டாப் பாக்ஸ் பொருத்த ரூ.250, மாதம்தோறும் ரூ.200 என்றும் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஆனால், செட்டாப் பாக்ஸ் பொருத்த ரூ.200 மட்டுமே, அதிகக் கட்டணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் அறிவுறுத்தியது. அதிக கட்டணம் கொடுக்கத் தயாராக இருந்தாலும் கூட தற்போது செட்டாப் பாக்ஸ்கள் இல்லை என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறுகிறார்கள்.

எஸ்.டி., எச்.டி. இரு வகைகளிலும் சுமார் 78 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை அரசு கொள்முதல் செய்வதாக கூறப்பட்டது. அப்படியிருக்கும்போது பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களால் திட்டமிட்டு பற்றாக்குறை உருவாக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். வேறு வழியே இல்லை எனும்போது, கூடுதல் கட்டணம் செலுத்தவும், தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வாங்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது’ என்றார்.

கோவை மாவட்டத்தில் பல லட்சம் மக்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன வாடிக்கையாளர்களாக உள்ளனர். அதில் சேலத்துக்கு அடுத்தபடியாக கோவையில் மட்டுமே இதுவரை 1.5 லட்சம் பேருக்கு இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவதில் தாமதம் நீடிக்கிறது. அரசியல் தலையீட்டின் காரணமாகவே செட்டாப் பாக்ஸ் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் ஆபரேட்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத கேபிள் ஆபரேட்டர் ஒருவர் கூறும்போது, ‘அரசியல் செல்வாக்கு உள்ள சில பெரிய ஆபரேட்டர்கள் அதிக அளவில் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி பதுக்கியுள்ளதாக தகவல் வருகிறது. தனியாருக்கு சாதகமாக திட்டமிட்டு பற்றாக்குறை நிலையை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பணம் செலுத்தத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை கொடுக்க முடியாமல் பல ஆபரேட்டர்கள் தவித்து வருகிறோம். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் விண்ணப்பித்து நாள் முழுக்க காத்திருந்தாலும் 20 செட்டாப் பாக்ஸ்கள் என்ற அளவிலேயே ஒதுக்கீடு கிடைக்கிறது. கோவை மாவட்டத்துக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். அதேபோல கட்டண விகிதத்தை முறைப்படுத்தவும், செட்டாப் பாக்ஸ்களை பதுக்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

ஆபரேட்டரே பொறுப்பு

விநியோகம், கட்டண விகிதம் போன்ற பிரச்சினைகளுக்கு நடுவே, செட்டாப் பாக்ஸுக்கான வைப்புத்தொகை செலுத்துவதில் பல்வேறு நடைமுறை பிரச்சினைகளை சந்திப்பதாக கேபிள் ஆபரேட்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசிடமிருந்து செட்டாப் பாக்ஸ்களை பெறும்போது, கேபிள் ஆபரேட்டர்கள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுகின்றனர். அதன்படி ரூ.2200 மதிப்புள்ள ஒரு செட்டாப் பாக்ஸுக்கு, ரூ.180 வைப்புத்தொகை செலுத்த வேண்டும். 6 தவணைகளில் அந்த தொகையை செலுத்தலாம். அதை வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர், ஒருவேளை குடிபெயரும்போது அதை எடுத்துச் சென்றுவிட்டாலோ அல்லது தொலைத்துவிட்டாலோ, செட்டாப் பாக்ஸ் முழு தொகையையும் ஆபரேட்டரே செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது.

நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஒவ்வொரு ஆபரேட்டருக்கும் இந்த அறிவிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x