Published : 19 Nov 2023 04:04 AM
Last Updated : 19 Nov 2023 04:04 AM
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 11 இடங்களில் நூலகம்திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு புத்தகங்கள், கல்வி உபகரணங்களை மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.
மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனையை வளர்க்கும் விதமாகவும் தமிழகம் முழுவதும் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்திருந்தார்.
அதன்படி, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, அரியலூர், நாமக்கல், சென்னை கிழக்கு, வட சென்னை கிழக்கு, வட சென்னை வடக்கு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் முதற்கட்டமாக நேற்று நூலகங்கள் திறக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், நூலகத்தை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு புத்தகம், கல்வி உபகரணங்களையும், நூலக உறுப்பினர் அட்டைகளையும் வழங்கினார். இது குறித்து அவர் கூறும் போது, ‘‘தளபதி விஜய் நூலகம் முதல் கட்டமாக தற்போது 11 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வரும் 23-ம் தேதி 21 இடங்களில் திறக்கப்படுகிறது.
நூலகத்தில் தலைவர்கள் வரலாறு, பொது அறிவு புத்தகங்கள், வரலாற்றுக் கதைகள், பல்வேறு தலைவர்களின் புத்தகங்கள், அறிவியல் அறிஞர்கள் எழுதிய அரிய வகை புத்தகங்கள், தினசரி செய்தித் தாள்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் நூலகத்திலேயே அமர்ந்து படிக்கலாம். மேலும், வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT