Published : 19 Nov 2023 04:04 AM
Last Updated : 19 Nov 2023 04:04 AM

கரூர் எம்.பி. ஜோதிமணி ஆய்வின்போது விடாமல் துரத்திச் சென்று கேள்விகேட்ட அதிமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்

எம்.பி. ஜோதிமணி, தமிழ்ச்செல்வன்

கரூர்: கரூரில் எம்.பி. ஜோதிமணி ஆய்வு மேற்கொண்ட போது கேள்வி எழுப்பிய அதிமுக கவுன்சிலர், விடாமல் துரத்திச் சென்று கேள்விகளை எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கரூர் அருகேயுள்ள வெண்ணெய் மலையில் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்காவை எம்.பி. ஜோதிமணி பார்வையிடச் சென்றார். அப்போது அதிமுகவைச் சேர்ந்த, கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் எஸ்.திரு.வி.க-வின் மகனும், கரூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருமான தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் "இப்பகுதிக்கு இப்போது தான் முதல்முறையாக வருகிறீர்கள். காதப்பாறையில் பிரச்சினை நிலவுகிறது" என்று ஜோதிமணியிடம் கூறினர்.

அதற்கு அவர் ‘‘நான் வந்த வேலையை முடித்துவிட்டு, உங்களுக்கு பதில் கூறுகிறேன்’’ என்று கூறிவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால், அம்மா பூங்கா திறக்கப்படவில்லையா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜோதிமணி, ‘‘அதிமுககாரர் மகன், காங்கிரஸ் எம்.பி. நன்றாகச் செயல்படுகிறார் என்றா கூறுவார்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதைக் கேட்ட தமிழ்ச்செல்வன், ‘‘எதற்காக அதிமுககாரர் என்கிறீர்கள். நான் ஒன்றியக் குழு உறுப்பினர். இதில் கட்சி எங்கிருந்து வந்தது?’’ என்றார். அதற்கு, ‘‘அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினரை, அதிமுக என்றுதானே குறிப்பிட முடியும்’’ என்ற ஜோதி மணி, ‘‘அநாகரிகமாக நடந்து கொள்ளாதீர்கள்’’ என்று கூறிவிட்டு, காரில் ஏறுவதற்காக சென்றார்.ஆனால் தமிழ்ச்செல்வன் விடாமல் கார் வரை ஜோதி மணியை துரத்திச் சென்றவாறு, தொடர்ந்து கேள்விகள் எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து எம்.பி. ஜோதிமணியிடம் கேட்டபோது, ‘‘காதப்பாறை கோயில் நிலப் பட்டா பிரச்சினையைத் தீர்க்கவும், அம்மா பூங்காவைத் திறக்கவும் நடவடிக்கை எடுப்பதால், அதிமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர். அதனால், பிரச்சினை செய்து, தகராறில் ஈடுபட்டனர்’’ என்றார்.

ஒன்றியக் குழு உறுப்பினர் தமிழ்ச் செல்வனிடம் கேட்ட போது, ‘‘எம்.பி.யாகி நான்கரை ஆண்டுகளான நிலையில், இரண்டரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பூங்காவுக்கு தற்போது தான் வந்துள்ளீர்கள் என்றேன். மேலும், காதப்பாறை குடிநீர் பிரச்சினை குறித்து கேட்க முயன்ற போது, வந்த வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு, வேறு எந்த பதிலும் சொல்லாமல் காரில் ஏறிச் சென்று விட்டார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x