

10 மசோதாக்கள் - பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்து நிறைவேற்றிட வகை செய்யும் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தனித்தீர்மானத்தின் மீதான உரையின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின் “தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களில் இடம் பிடித்துள்ளது திமுக அரசு. இதனை அரசியல் ரீதியாக சகித்து கொள்ள இயலாத சிலர், அரசு நிர்வாகத்தை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியதுதான் மரபு ஆகும்” என்று பேசினார்.
இபிஎஸ் Vs அமைச்சர்கள் | பேரவையில் காரசார விவாதம்: முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஆளுநர் இந்த 10 சட்ட மசோதாகக்ளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன். ஆளுநர் மசோதாக்களை ‘வித் ஹோல்டு’ (WithHold) செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதாவது, நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார். நிராகரிக்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லை. இதன் மூலம் மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகத்தான் பொருள்படுகிறது. எனவே, மசோதாக்களை மறு ஆய்வு செய்வதில் சட்டச் சிக்கல் இருக்கிறதா என்பதை தமிழக அரசுதான் ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்த தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி “ஆளுநர் நிலுவையில் வைக்கவில்லை. திருப்பி அனுப்பி வைத்துள்ளார். ஏதோ ஒரு சட்ட மசோதாவில் அளித்த ஆலோசனையின் பேரில் கெட்டிக்காரத்தனமாக செயல்படுவதைப் போல ஆளுநர் நினைத்துக் கொண்டிருக்கிறார்" என்று விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு “ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும்போது, With Hold என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள்” என்று விளக்கினார்.
அதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “மசோதாக்களை ஆளுநர் WithHold செய்கிறார் என்றால், அதை ஒப்புதல் அளிக்காமல் நிராகரிக்கிறார் என்றே பொருள். மசோதாக்களை மறு ஆய்வு செய்வதற்கான அனுமதி அளிக்க சபாநாயகர் என்ற அடிப்படையில் எனக்கு அதிகாரம் இருக்கிறது. எந்தவித மாற்றங்களும் இல்லாமல் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்படும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவேண்டும்” என்றார்.
“சட்டப்பேரவையை பொதுக்கூட்ட மேடையாக்கக் கூடாது”: "சட்டப்பேரவை மிகப்பெரிய மாண்பும், மதிப்பும் கொண்டது. அதை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக் கூடாது" என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பின்னர் முதல்வர் கொண்டுவந்த அரசின் தனி தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கவனம் ஈர்த்த செல்வப் பெருந்தகை: காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை பேரவையில் பேசும்போது, "இந்த நாளில் முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே வழிகாட்டும் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். அதற்காக அவருக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அப்படிப்பபட்ட தீர்மானத்தை கொண்டு வந்த சூரரை போற்றுகிறோம். ஒரு ஆளுநர் எதையும் பொருட்படுத்தாமல் ஏதோ முடியாட்சி நடப்பதைப் போல தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அவர் விளையாடட்டும்.. நாளை நமது இந்திய அணி வெற்றி பெறுவதைப் போல நமது முதல்வர் வெற்றி பெறப் போகிறார்" என்று பேசினார்.
அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: "உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.
“பெண்களின் நம்பிக்கையை ராஜஸ்தான் அரசு சிதைத்துவிட்டது”: ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் சனிக்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரப் பேரணிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசும்போது, , “பெண்களின் நம்பிக்கையை ராஜஸ்தான் அரசு சிதைத்துவிட்டது. பெண்கள் போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். அவரால், பெண்களைப் பாதுகாக்க முடியாதா? அப்படி பாதுகாக்க முடியாத முதல்வர் ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்கலாமா?" என்று கேள்வி எழுப்பினார்.
சுரங்கப் பாதையில் சிக்கியோரின் குடும்பத்தினருக்கு உதவிகள்: ஏழாவது நாளாக நடைபெற்ற மீட்புப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், உத்தராகண்ட்டில் சுரங்கப் பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தங்கும் இடம், உணவு, மருத்துவ வசதிகளை மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
“நான் சிறையில் இருந்தாலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும்”: "நான் கைது செய்யப்பட்டாலும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் சிறை செல்வதற்கு தயங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆஸி. அணியை பழிதீர்த்து கோப்பையை வெல்லுமா இந்திய அணி?: 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு, 20 ஆண்டுகள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. நடப்புத் தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத பலம் பொருந்திய இந்திய அணி கோப்பையை வென்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Open AI சிஇஓ சாம் ஆல்ட்மேன் நீக்கம்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக இடைக்கால சிஇஓ-வாக 34 வயதான மீரா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.