Last Updated : 18 Nov, 2023 04:29 PM

1  

Published : 18 Nov 2023 04:29 PM
Last Updated : 18 Nov 2023 04:29 PM

திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக உருவாகும் சுங்கச்சாவடி: செஞ்சி பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு

செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் அருகே அமைக்கப்படும் சுங்கச்சாவடி.

விழுப்புரம்: திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச் சாவடிக்கு செஞ்சி சுற்று வட்டார விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேளாண் சாகுபடி, அதைத் சார்ந்த கால்நடை உற்பத்தி உள்ளிட்ட வளர்ச்சியை அடிப்டையாக கொண்டது விழுப்புரம் மாவட்டம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நகராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளை, விவசாயிகளே 90 சதவீதம்பயன்படுத்தி வருகின்றனர். கரும்பு, நெல், உளுந்து, காய்கனிகள், கரும்பு மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்காக இந்தச் சாலைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இதில், கிராம பகுதிகளில் பல இடங்களில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விவசாயிகள் இடையே வலுத்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கூடுதல் சுங்கசாவடிகள் அமைப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி ஏராளமான வேளாண் விளை நிலங்கள், அதையொட்டிய வர்த்தகம் இருந்து வரும் நிலையில் இந்த புதிய சுங்கச் சாவடிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் சுங்கச் சாவடி ஒன்று புதிதாக அமைக்கப்படுகிறது.இதற்கு இப்பகுதி விவசாயிகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யாதவ மக்கள் இயக்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கம் கு.ராஜாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நாட்டார்மங்கலம் அருகே சுங்க வரி கட்டண மையம் தொடங்க ஆரம்ப கட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்த மையத்தை திறக்கக் கூடாது. திண்டிவனம்- திருவண்ணாமலை சாலை என்பது இரண்டு வழி சாலையாகவே உள்ளது.இச்சாலையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. சுங்க வரி கட்டணம் வசூல் செய்யும் அளவுக்கு திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த சுங்கச்சாவடி மையத்தை நடைமுறைப்படுத்த விடாமல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.

திருவண்ணாமலை பவுர்ணமிக்கு வரும் பக்தர்களுக்கும், செஞ்சிக் கோட்டையை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கும் புதிதாக அமைக்கப்படும் இந்தச் சுங்கச் சாவடி பெரும் சுமையாக இருக்கும்” என்று தெரிவித்தார். தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கடவம்பாக்கம் வி.எம்.மணி கூறுகையில், “விழுப்புரம் மாவட்டத்தில் சுங்கச்சாவடி இல்லாத தேசிய நெடுஞ்சாலையாக திண்டிவனம்- திருவண்ணாமலை சாலை இதுவரை இருந்து வந்தது. இச்சாலை வழியாகத்தான் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் செம்மேடு கிராமத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை எவ்வித கட்டணமும் இன்றி கொண்டு சென்று வருகின்றனர்.

தற்போது நாட்டார் மங்கலம் அருகே அமைய உள்ள சுங்கச் சாவடியால் விவசாயிகள் விற்பனைக்கு விளை பொருட்களை கொண்டு செல்லும் போது கூடுதலாக செலவிட வேண்டிய சூழல் உள்ளது. எனவே, இங்கு சுங்கச்சாவடி அமைய உள்ளதை தமிழக அரசு தடுக்க வேண்டும். இதற்கான உரிய முயற்சிகளை தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் மஸ்தான் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையின் நகாய் அதிகாரிகள் வட்டாரத்தில் இதுபற்றி கேட்ட போது, “நாட்டார்மங்கலத்தில் புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் நான்கைந்து மாதங்களில் இங்கு சுங்கச்சாவடி அமைய இருக்கிறது” என்று தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x