

திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 100 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாஞ்சோலையில் 72 மி.மீ., காக்காச்சியில் 80 மி.மீ., ஊத்து பகுதியில் 95 மி.மீ. மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 55, சேரன்மகாதேவி- 1.40, மணிமுத் தாறு- 46.20, பாபநாசம்- 54, சேர்வலாறு- 23, கன்னடியன் அணைக்கட்டு- 84.60, களக்காடு- 62.20, கொடுமுடியாறு- 25, நம்பியாறு- 18. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாம் அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 99.10 அடியை எட்டியிருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,103 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 157 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 67.50 அடியாக இருந்தது. அணைக்கு 695 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.43 அடியாக இருந்தது. களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை வரையான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 31 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணையில் 26 மி.மீ., ராமநதி அணையில் 24.40, கடனாநதி அணை, ஆய்க்குடியில் தலா 10, தென்காசியில் 3.60, செங்கோட்டையில் 2.40 மி.மீ. மழை பதிவானது.
கருப்பாநதி அணை நிரம்பியது: குண்டாறு அணையில் நீர் மட்டம் முழு கொள்ளளவில் உள்ள நிலையில் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் கருப்பாநதி அணை முழுமையாக நிரம்பியது. இதனால் இந்த அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. கருப்பாநதி அணையில் இருந்து வரும் நீரால் பாப்பான் கால்வாய், சீவலான் கால்வாயில் நேற்று அதிகாலை யில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பாப்பான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குப்பைகள் அடித்துவரப்பட்டதால் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடையநல்லூர் நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று, குப்பைகளை அகற்றி, அடைப்பை நீக்கி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுவது தவிர்க்கப்பட்டது