தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு | 21 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு | 21 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
2 min read

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைப்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 21 பேருக்கு எதிராக துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. பின்னர், அந்த ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் ஹென்றி திபேன்,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தவழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

இடைநீக்க நடவடிக்கை: அதில், ‘துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த என்.வெங்கடேஷ், தென்மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜியாக இருந்த கபில்குமார் சி.சரத்கர், தூத்துக்குடி எஸ்.பி.யாகஇருந்த பி.மகேந்திரன், டிஎஸ்பி-க்கள் ஆர்.லிங்கதிருமாறன், திருமலை, ஆய்வாளர்கள்என்.ஹரிஹரன், டி.பார்த்திபன்மற்றும் போலீஸார், துணை வட்டாட்சியராக பணிபுரிந்த பி.சேகர் உள்ளிட்ட 3 வருவாய் துறையினர் என மொத்தம் 21 பேருக்கு எதிராக துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் பலருக்குஇந்த சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்டும், பலர் இடைநீ்க்கம் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘துப்பாக்கிச்சூடு சம்பவம்தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் தற்போதையநிலை என்ன? ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அப்படியென்றால் மற்ற அதிகாரிகளுக்கு எதிரான குற்ற வழக்கு கைவிடப்பட்டதா’’ என்று கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக அடுத்த விசாரணையின்போது விளக்கம் அளிக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் பணியில் தொடர்கின்றனரா அல்லது ஓய்வு பெற்று விட்டார்களா என்பதும் தெரியவில்லை. எனவே, இந்த 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன என்பதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in