Published : 18 Nov 2023 05:29 AM
Last Updated : 18 Nov 2023 05:29 AM
சென்னை: புதிதாக திட்ட அனுமதி பெறப்படும், 5 மாடி மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டிடங்களில், வீடுகளுக்கான மின்சார மீட்டர்கள், மெயின்ஸ்விட்ச் பாக்ஸ்களை அந்தந்த தளங்களில் அமைக்க மின் ஆய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அடுக்குமாடி கட்டிடங்களில் மின்சார மீட்டர்கள், மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் போன்றவை மொத்தமாகத் தரைதளம் அல்லது அடித்தளத்தில் ஒரே இடத்தில் அமைக்கப்படுவது வழக்கம்.
ஒரே இடத்தில் 50 முதல் 100 இணைப்புகளுக்கான மீட்டர்கள் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்களை அமைப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒரேஇடத்தில் அதிக எண்ணிக்கையிலான மீட்டர்கள்மற்றும் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்கள் அமைத்ததே இந்த தீ விபத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, 5 மாடிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட கட்டிடங்களில் தேசிய மின் ஆய்வு ஆணையம் ஒரே இடத்தில் ஸ்விட்ச் பாக்ஸ்களை வைப்பதற்குத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக, மின் ஆய்வுத் துறைபிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது: அடுக்குமாடி கட்டிடங்களில் ஒவ்வொரு தளத்திலும் ‘பஸ்பார் டிரங்கிங்’ முறையில் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் மீட்டர்களை அமைக்க வேண்டும் என தேசிய மின் ஆய்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக உயரமுடைய அடுக்குமாடி கட்டிடங்களைக் கட்டுவோர் இந்தப் புதியநடைமுறையை பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.பொது கட்டிட விதிகளின்படி, தமிழகத்தில் 60 அடிஉயரம் அதாவது, 6 மாடிக்கு மேற்பட்டவை அடுக்குமாடி கட்டிடங்களாக வகைப் படுத்தப்படுகின்றன.
ஆனால், தேசிய கட்டிட விதிகளின்படி, 49 மீட்டர் அதாவது 5 மாடிக்கு மேற்பட்ட கட்டிடங்களே அடுக்குமாடிகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
எனவே, 49 அடிக்கு மேற்பட்ட உயரம் கொண்டகட்டிடங்களின் ஒவ்வொரு தளத்திலும் மின்சார மீட்டர், மெயின் பாக்ஸ் அமைக்கப்பட வேண்டும்.இதில் ஏற்கெனவே திட்ட அனுமதி பெற்ற கட்டிடங்களை மட்டும் விடுத்து, புதிய கட்டிடங்களில் இந்த விதி அமலாக்கப்படுவது உறுதி செய்யப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT