Published : 18 Nov 2023 04:40 AM
Last Updated : 18 Nov 2023 04:40 AM

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டப்பேரவை இன்று கூடுகிறது

சென்னை: தமிழக ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த சூழலில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர்அனுமதியளிக்க வேண்டுமெனபல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தினர். இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்குகால நிர்ணயம் செய்ய வேண்டும்என வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று தெரிவி்த்தது. மேலும், மசோதா நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால்,முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது திருத்தம் மேற்கொள்ளபரிந்துரைத்து திருப்பியனுப்பலாம். அல்லது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பலாம். எதுவும் செய்யாமல் கிடப்பில் போட முடியாது என்றும் கருத்து தெரிவித்தது.

இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாஉள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பிஅனுப்பினார். தொடர்ந்து, இந்தமசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநரால் ஒப்புதல் அளிக்காமல் இருக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு, மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழக அரசு முடிவெடுத்தது.

இதை முன்னிட்டு, இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூட்டியுள்ளார். இன்று காலை 10 மணிக்குசட்டப்பேரவை கூடும் நிலையில்,ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x