

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சித்த தமிழக அரசை எதிர்த்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்த தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டிக்கிறேன். நாளை (இன்று) தமிழக பாஜக சார்பில் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்’’ என்று தெரிவித் திருந்தார்.
இதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘‘செய்யாறில் 3,300 ஏக்கர் விளை நிலங்களை `சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்த திமுக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகளை ஒடுக்கும் வகையில், தொடர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயி களுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்த ஒருபோதும் தயங்காது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூ.) மாநிலப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிய கம்யூ.) மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன் ஆகியோரும், விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்தனர்.
இந்நிலையில், மேல்மா சிப்காட்எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் தவிர, மற்ற 6 விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு உத்தரவிட்டார்.