Published : 11 Jan 2018 08:54 AM
Last Updated : 11 Jan 2018 08:54 AM

மியூசிக் அகாடமியில் மீண்டும் அரங்கேறுகிறது `தெய்வத்துள் தெய்வம்’ நாடகம்

கடந்த அக்டோபரில் `ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்னும் சிலிர்ப்பூட்டும் பாடலோடு அரங்கேறியது `தெய்வத்துள் தெய்வம்’ நாடகம். திண்டிவனத்தில் ஆன்மிக ஈடுபாட்டு டன் வளரும் சிறுவன் சுவாமிநாதன் காஞ்சி பெரியவராக மடத்துக்குப் பொறுப்பேற்கும் தருணத்தில் இருந்து ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கனகாபிஷேகம் செய்வது வரையிலான சம்பவங்கள் உணர்வுபூர்வமாக இந்த நாடகத்தில் இடம்பெற்றிருந்தன.

காஞ்சிப் பெரியவரின் பெருவாழ்வை பால பருவம், இளமைப் பருவம், மத்திம பருவம், முதிய பருவம் என நான்கு பேர், முறையே ஆதித்யா, ஷரத் பரத்வாஜ், கணேச சர்மா, வாசுதேவன் ஆகியோர் காஞ்சிப் பெரியவரை மனதில் வரித்துக்கொண்டு அந்தப் பாத்திரமாகவே மாறி நடித்திருந்தனர்.

அந்நாடகத்தை பார்க்க தவறவிட்ட ரசிகர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஜனவரி 15 முதல் 19 வரை சென்னை, மியூசிக் அகாடமியில் தினமும் மாலை 7 மணிக்கு மீண்டும் இந்நாடகம் அரங்கேற உள்ளது.

எஸ்.எஸ்.இண்டர்நேஷனல் லைவ் அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன் எழுதி, இயக்கியிருக்கும் நாடகம் ‘தெய்வத்துள் தெய்வம்’. “தற்போது அரங்கேற இருக்கும் நாடகத்தில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த சிறப்புகளுடன் கூடுதலாக ஏதாவது சிறப்புஅம்சம் இருக்குமா?’’ என்று அவரிடம் கேட்டோம்.

“கடந்த அக்டோபரில் இந்த நாடகத்தை தவறவிட்டவர்களுக்கு இந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. அதே சமயம், ஏற்கெனவே நாடகத்தை பார்த்தவர்களும் மீண்டும் பார்த்து ரசிப்பதற்கு ஏற்ப, தற்போது அரங்கேறப் போகும் நாடகத்தில் சில காட்சிகளைச் சேர்த்திருக்கிறோம். புகழ்பெற்ற நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம் ஆகியோர் `தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தில் பாத்திரங்களாக வருகிறார்கள்.

அரங்கம் தோட்டா தரணி, தொகுப்பு கணேச ஷர்மா, உடைகள் தாரிணி கோமல் என அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் பின்னணியிலும், இன்றைய முன்னனி நாடகக் குழு நடிகர்களுடன் புதுமுகங்கள் பலரும் சேர்ந்து 108 கலைஞர்கள் வழங்கும் இந்தப் பிரம்மாண்டமான ஆன்மிகப் படைப்பு ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு என்று நிச்சயமாக சொல்லலாம்!

இந்நாடகத்துக்கான இலவச நுழைவு சீட்டுகள் இன்று காலை 10 மணி முதல் மாலை வரை மியூசிக் அகாடமியில் வழங்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் என முதலில் வருபவர்க்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்!” என்றார் இயக்குநர் இளங்கோ குமணன்.

எஸ்.எஸ்.இண்டர்நேஷனலின் முரளிதரன், அனந்தகிருஷ்ணன் ஆகியோர், “சென்ற அக்டோபரிலும் இந்நாடகத்தை இலவசமாகவே அரங்கேற்றினோம். காரணம், காஞ்சிப் பெரியவரின் வாழ்க்கை வரலாற்று நாடகமான இதை வணிகரீதியாக டிக்கெட் விற்பனை செய்து காட்சிப்படுத்தக் கூடாது என்பதால்தான். அதனால்தான் பக்திபூர்வமான இந்நாடகத்தை இப்போதும் இலவசமாகவே நடத்தவிருக்கிறோம். ஆனாலும் 108 பேர் பங்களித்திருக்கும் இந்த நாடகத்துக்கான செலவுகளை விளம்பரதாரர்கள் தரும் ஆதரவின் மூலம் சமாளிக்கிறோம். விளம்பரதாரர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்பட்சத்தில் உலகில் தமிழ் மக்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் இந்த நாடகத்தை அரங்கேற்ற தயாராக இருக்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x