கண்டதேவி கோயிலில் ஜன.21-ல் புதிய தேர் வெள்ளோட்டம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் 

கண்டதேவி கோயிலில் ஜன.21-ல் புதிய தேர் வெள்ளோட்டம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் 
Updated on
1 min read

மதுரை: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜனவரி 21-ல் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் பழைய தேர் பழுதான நிலையில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர் வெள்ளோட்டம் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. தேர் வெள்ளோட்டம் நடத்தக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் 2019-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புதிய தேர் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும். அதன் பிறகு கோயில் விழாக்களில் தேரோட்டம் நடத்தப்படும் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கு முடிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை தேர் வெள்ளோட்டம் நடைபெறவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அறநிலையத்துறை இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கண்டதேவி தேர் வெள்ளோட்டம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி ஜன 21-ல் கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் நடைபெறும். அன்று காலை 6.30 மணிக்கு ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து தேர் வெள்ளோட்டம் நடைபெறும். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது என்றார். இதை பதிவு செய்து கொண்டு அவமதிப்பு மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in