

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 20 முதல் 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்துதர உத்தரவிடப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு விஐபி பாஸ் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பணியாளர்களுக்குதான் அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பரணி தீபத்துக்கு 4 ஆயிரம் பேர், மகா தீபத்துக்கு 7 ஆயிரம் முதல் 7,500 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக அனுமதிக்க சாத்தியக்கூறு இருந்தால், ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.