Published : 16 Jan 2018 08:47 AM
Last Updated : 16 Jan 2018 08:47 AM

15 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும்: துக்ளக் விழாவில் அருண் ஜேட்லி நம்பிக்கை

‘‘அடுத்த 15 ஆண்டுகளில் சமூக, பொருளாதார கட்டமைப்பில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்’’ என்று துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

துக்ளக் இதழின் 48-வது ஆண்டுவிழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துக்ளக் நிறுவனர் மறைந்த சோ எழுதிய,‘அன்றைய வேதங்களும் இன்றைய விவகாரங்களும்’ மற்றும் தற்போதைய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எழுதிய, ‘ரூபாய் நோட்டுக்குத் தடை’ என்பது உள்ளிட்ட 3 நூல்களை அருண் ஜேட்லி வெளியிட்டார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது: இந்தியாவில் மே 2014-ல் நரேந்திர மோடி பிரதமராக வருவதற்கு முன், பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்தது. நமது பாதுகாப்பு நிலைமை மோசமாக இருந்தது. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் சாலையில் வந்து கற்களை வீசி எறிந்து கொண்டிருந்தார்கள். பாதுகாப்பு படைகள் பின்வாங்கிக் கொண்டிருந்தன. மத்திய இந்தியாவில் பார்த்தால், அதிதீவிர இடதுசாரிகள் மேலோங்கியிருந்தனர்.

முன்னதாக ஒரு குடும்பம்தான் அரசை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. பிரதமர் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலையில் இருந்தார். நாட்டின் பாதுகாப்பு நிலை சவாலாக இருந்தது. சவாலான நேரத்தில் தான் நரேந்திர மோடி கடினமான முடிவுகளை எடுத்தார். ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்பது எளிமையானதல்ல. பல வழிகளில் நமது ராணுவத்தை அனுப்பி, எதிர்நாட்டின் முகாம்களை அழித்துவிட்டு திரும்ப வேண்டும். இது சாதாரணமானதல்ல.

அதேபோல், ஊழல் ஒழிப்புக்கான மிக முக்கிய நடவடிக்கை தான் பணமதிப்பு நீக்கம். கடினமான மனநிலையில் தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்குப்பின், நாட்டின் வரிவருவாய், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆகியவை அதிகரித்துள்ளன. விவசாயம், வங்கி மறுசீரமைப்பு, இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நாட்டில் எதிர்ப்புணர்வை சில சக்திகள் தூண்டி வருகின்றன. ஜிகாதிகளும்- அதிதீவிர இடதுசாரிகளும் கைகோத்துள்ளனர். ஜாதியின் பெயராலும், பல்வேறு பிரிவுகளின் பெயராலும் உருவெடுத்தவர்கள் நாட்டை பிரிக்க வேண்டும் என்று எண்ணும்போது அவர்களுக்கு காங்கிரஸ் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா பொருளாதாரத்தில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் சமூக, பொருளாதார கட்டமைப்பில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. குறைந்த பட்சம் நான்கரை ஆண்டுகளாவது பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். கடந்த 1967-ம் ஆண்டுக்குப்பின் தேர்தல்கள் வேறுமாதிரியாக நடந்து வருகின்றன. நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அரசியலும் தேர்தல் அடிப்படையிலேயே சென்று கொண்டிருக்கிறது. அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் என்ற நிலை வந்துவிட்டால், அமைதியான நிர்வாகம் நடக்கும் என்பது எனது நம்பிக்கை.

இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினி - மோடி

நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: தமிழகத்தில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் மங்கி வருகின்றன. இந்த அரசை பொறுத்தவரை வசூல் அரசுதான். தற்போது இந்த அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இது தமிழகத்தின் துர்பாக்கியம். இன்று எந்த அரசியல் கட்சியும் சரியான திசையில் தமிழகத்தை கொண்டு செல்லவில்லை. இந்த அரசை வீழ்த்த திமுகவும் தயாரில்லை. ஆளுமை இல்லாத பழனிசாமியை வெளியேற்ற யாராலும் முடியவில்லை. தமிழக நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இந்த மாதிரி கேவலமான நிலை எந்த அரசிலும் இருந்ததில்லை. இது தமிழகத்துக்கு நல்லதல்ல.

இலவச அரசியலால் தமிழகம் மீளாக்கடனில் மாட்டியுள்ளது. தமிழகத்தில் இளைஞர்களை ஈர்க்கும் தலைமை இல்லை; கொள்கை இல்லை; நேர்மை இல்லை. ரஜினியின் ஆன்மிக அரசியல் நாணயமானது. கமல் திமுக, அதிமுகவின் தொடர்ச்சியாகவே இருப்பார். திமுக, அதிமுகவுடன் பாஜக சேர்ந்தது என்றால் ‘சதி’ செய்கிறது என்று அர்த்தம். ரஜினியும் - பாஜகவும் இணைந்து வேலை செய்கிறது என்றால், ஒரு பக்கம் ரஜினி படம், இன்னொரு பக்கம் நரேந்திர மோடி படம் போட்டால் தமிழகத்தின் முடிவைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x