மேட்டூர் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

மேட்டூர் அனல்மின் நிலையம் எதிரேயுள்ள பாலத்தின் வழியாக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய தண்ணீர்.
மேட்டூர் அனல்மின் நிலையம் எதிரேயுள்ள பாலத்தின் வழியாக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய தண்ணீர்.
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அருகே காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் சாலையில் தண்ணீர் வீணாகிறது.

காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், பி.என்.பட்டி, வீரக்கல் புதூர், மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. திட்டம் செயல்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த நிலையில் தண்ணீரின் வேகம், குடிநீரை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் குளோரின் உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் திட்ட இரும்பு குழாயில் அரிப்பு ஏற்பட்டு, குழாயில் அடிக்கடி வெடிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறுகிறது.

இந்நிலையில் நேற்று, மேட்டூர் அனல்மின் நிலையம் எதிரேயுள்ள பாலத்தின் வழியாக செல்லும் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு உடைந்தது. இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையிலும், காவிரி ஆற்றிலும் வீணானது. குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்தில் 4 முறை குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது குறிப்பிடத்தக்கது. ‘ராட்சத குழாயை மாற்றி புதிய குழாயை அமைக்க வேண்டும்’ என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இந்த குடிநீர் திட்ட குழாயை முழுமையாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. வரும் காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in