Published : 17 Nov 2023 06:00 AM
Last Updated : 17 Nov 2023 06:00 AM
சென்னை: சென்னையில் தொழிலதிபர்களின் வீடுகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அமைச்சர்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள் என பல இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பெங்களூரு, கொச்சியில் இருந்து வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி, பிரபல ஜவுளி நிறுவன உரிமையாளரான நீலகண்டன் என்பவரது கே.கே.நகர் வீடு மற்றும் அலுவலகத்தில் 5-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், தியாகராயநகர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசிக்கும் சகோதரர்களான, தொழிலதிபர்கள் பிரகாஷ், தினேஷ், நாகேஷ் ஆகியோரின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், கோபாலபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வினோத் கிருஷ்ணா வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. பட்டாளத்தில் ஆடிட்டர் ராஜேஷ் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது. நுங்கம்பாக்கம், மண்ணடி என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கொச்சி, பெங்களூருவில் நடைபெற்ற வரி ஏய்ப்பு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், சோதனை தொடர்பான முழு விவரங்கள் எதையும் வருமான வரித் துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த சோதனை நள்ளிரவு தாண்டியும் நீடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT