

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான கோடம்பாக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் தற்போதுவரை 50 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் கோடம்பாக்கம் - பூந்தமல்லி தடத்தில் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. குறிப்பாக, இந்த வழித்தடத்தில் உயர்மட்டப்பாதையில் 18 நிலையங்களில் 13 நிலையங்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் - பூந்தமல்லி வரை தடத்தில், உயர்மட்டப் பாதையில் 50 சதவீதம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். இந்த குறிப்பிட்ட பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, வரும் 2025-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம், வளசரவாக்கம், சாலிகிராமம், காட்டுப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய நிலையங்களுக்கான நுழைவு, வெளியேறும் முனை அமைக்கப்படுகிறது. பல இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.