Published : 17 Nov 2023 06:33 AM
Last Updated : 17 Nov 2023 06:33 AM

சிறு வழக்குகளில் முதல்முறையாக சிக்கிய சிறார் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் போலீஸார்: படிப்பை தொடரவும், வேலைவாய்ப்பு பெறவும் உதவி

சென்னை: சிறிய குற்ற வழக்குகளில் முதல் முறையாக சிக்கிய இளஞ்சிறார், இளம் குற்றவாளிகளை சென்னை போலீஸார் நல்வழிப்படுத்துவதோடு படிப்பைத் தொடரவும், வேலை வாய்ப்பை பெறவும் உதவி வருகின்றனர். சென்னையில் 24 வயதுக்கு உட்பட்ட, முதல்முறையாக சிறியகுற்ற வழக்குகளில் சிக்கி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ‘பறவை’ என்ற முன்னோடி திட்டம் சென்னையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தனர்.

‘பறவை’ திட்டத்தின் நோக்கம்: இளம் குற்றவாளிகளுக்கு மனநல ஆலோசனை, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை, மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை என அவர்களின் வாழ்வை நலமாக்கசிறையிலேயே முறையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி சமுதாயத்தில் சரியான பாதையில் கொண்டு செல்ல அவர்களை நல்வழிப்படுத்துவது ‘பறவை’ திட்டத்தின் நோக்கமாகும். இந்த ‘பறவை’ திட்டத்தின் மேற்பார்வை அதிகாரியாக, சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் உள்ளார்.

அவரது மேற்பார்வையில் 30 காவல் சரகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 30 போலீஸார் கொண்ட குழுவினர் இளங்குற்றவாளிகளை கண்காணிக்கின்றனர். ‘பறவை’ திட்டத்தில் சென்னை போலீஸாருடன் இணைந்து சிறைத்துறை, சமூகநல பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவிக்குழு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மனநலக்காப்பகம் ஆகிய அரசுத் துறைகளில் இதற்கென ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தன்னார்வலர்களும் உள்ளனர்.

கண்காணிப்பில் 534 பேர்: இத்திட்டத்தின்கீழ் (பறவை) இதுவரை சைதாப்பேட்டை கிளைச்சிறையில் 418 இளங்குற்றவாளிகளும் கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் 116 இளஞ்சிறார்களும் கண்காணிப்பில் உள்ளனர். இத்திட்டத்தில் பணியாற்றும் போலீஸார் மூலம் 418 இளங்குற்றவாளிகளில் (19 முதல் 24 வயது வரை) 244 பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு ஏற்கெனவே படித்த கல்லூரியில் தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் 166இளஞ்சிறார்களுக்கு (18 வயதுக்குஉட்பட்டோர்) 31 பேருக்கு வேலைவாய்ப்பும், 24 பேருக்கு ஏற்கெனவே படித்த பள்ளியிலும், 7 பேருக்கு ஏற்கெனவே படித்த கல்லூரியிலும் தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறை, சமூகநல பாதுகாப்புத் துறை உட்பட இத்திட்டத்தில் உள்ள அனைத்து துறையைச் சேர்ந்தவர்களின் ஆய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x