Published : 17 Nov 2023 06:29 AM
Last Updated : 17 Nov 2023 06:29 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணைப்படி ஊதிய உயர்வு கோரி அரசு மருத்துவர்கள் சென்னையில் கோரிக்கை போராட்டம்

ஊதிய உயர்வு தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணையை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு கோரி அரசு மருத்துவர்கள் சென்னையில் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள்,அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம்மற்றும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் நேற்று கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளை அங்கி அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் பங்கேற்ற அரசு மருத்துவர்கள் கூறிய தாவது:

அரசாணை 354: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய உயர்வுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். அரசுமருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யும் அரசாணை 354-ஐ மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். பலஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்தஅரசாணை அமல்படுத்தப்பட வில்லை. சில ஆண்டுகளுக்கு முன் சென்னைஅரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்ததும் அரசாணை 354-ன்படி ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

அரசு நிறைவேற்றவில்லை: ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்தபிறகும் இன்னும் அரசாணை 354 நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர் களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி: இதற்கிடையே, தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் ஆகியோருடன் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்வதாகவும், அரசு மருத்துவர்களிடையே பாகுபாட்டோடு வெளியிடப்பட்ட படிகள் அரசாணை 293-ஐ திருத்துவதாகவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x