

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
பழநி வடக்கு கிரி வீதியில் பாத விநாயகர் கோயிலுக்கு எதிரில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2,486 சதுர அடி பரப்பளவு நிலம் உள்ளது. ரூ.10 கோடி மதிப்பிலான அந்த நிலம் 20 தனி நபர்களின் பலவகையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தது.
இந்நிலையில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் காவல் மற்றும் வருவாய்த் துறை உதவியுடன் அந்த நிலம் மீட்கப்பட்டது. அந்த இடத்தில் பக்தர்களுக்கு வசதியாக தேவஸ்தானம் சார்பில் நேற்று முதல் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் அமைக் கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் தங்களுக்குத் தேவையான பஞ்சாமிர்தத்தை வாங்கிக் கொள்ளலாம்.
இதேபோல், ஐயப்ப சீசனை முன்னிட்டு பழநி மலைக் கோயில் மற்றும் அடிவாரப் பகுதியில் பக்தர்கள் வசதிக்காக 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.