Published : 19 Jan 2018 08:12 AM
Last Updated : 19 Jan 2018 08:12 AM

ரூ.65 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 4 பேர் கொண்ட கும்பல் கைது- 3 பிரிண்டர்கள், அச்சு மை, தாள்கள் சிக்கின

பொதுமக்களிடம் புழக்கத்தில் விட இருந்த ரூ.65 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய இயந்திரத்தை பறிமுதல் செய்த தனிப்படையினர் 4 பேர் கொண்ட கும்பலை விருதுநகர், கோவையில் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த சேத்தூரான் என்பவரின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் இருப்பதாகவும், அடிக்கடி வெளியூர் சென்று வருவதாகவும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு முக்தீஸ்வரத்தை சேர்ந்த கொம்பையா என்பவர் அடிக்கடி சேத்தூரானை சந்தித்து வருவதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இருவரையும் கண்காணிக்க வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தர விட்டார்.

ரகசிய தகவல்

இந்நிலையில் ஜன. 16-ம் தேதி இருவரும் சாத்தூரில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சூலக்கரை காவல் வட்ட ஆய்வாளர் ராமராஜ் தலைமையில் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வந்த காரில் 525 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் (ரூ.10.50 லட்சம்) இருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் கள்ளநோட்டுக்கள், காரை கைப்பற்றினர்.

கோவையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் தன்ராஜிடம் இருந்து பணம் வாங்கி வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு மாற்றப்பட்டு கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், தன்ராஜ் கைது செய்யப்பட்டனர்.

விக்னேஷ் வீட்டில் இருந்த 1,216 எண்ணிக்கையிலான 20 ரூபாய் கள்ளநோட்டுகள், 1,443 எண்ணிக்கையிலான 50 ரூபாய் கள்ளநோட்டுகள், 2,096 எண்ணிக்கையிலான 100 ரூபாய் கள்ளநோட்டுகள், 182 எண்ணிக்கையிலான 200 ரூபாய் கள்ளநோட்டுகள்,1,294 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள், 2,029 எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் என மொத்தம் ரூ.50,57,040 நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 3 கலர் பிரிண்டர் இயந்திரங்கள், அச்சு மைகள், தாள்கள் மற்றும் உபகரணங்களை கைப்பற்றினர்.

தன்ராஜிடம் இருந்து 200 எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் (ரூ.4 லட்சம்) கைப்பற்றப்பட்டன. இருவரும் விசாரணைக்குப்பின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

விசாரணையில், 4 பேரும் கூலி தொழில் செய்து வருவதும், விரைவில் பணம் சம்பாதிப்பதற்காக விக்னேஷ் மற்றும் தன்ராஜ் தயாரித்து கொடுத்த கள்ள நோட்டுகளை சேத்தூரான் மற்றும் கொம்பையா ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் திருவிழா காலங்களில் புழக்கத்தில் விட ஏஜெண்டுகளாக செயல்பட இருந்ததும் தெரியவந்தது.

4 பேரிடம் இருந்து மொத்தம் ரூ. 65,07,040 கள்ள நோட்டுகள் மற்றும் கள்ளநோட்டு தயாரிக்கத் தேவையான இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய தனிப்படை போலீஸாரை விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x