மீண்டும் ‘நிலுவை மசோதா’ விவகாரம் முதல் செய்யாறு சர்ச்சை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.16, 2023

மீண்டும் ‘நிலுவை மசோதா’ விவகாரம் முதல் செய்யாறு சர்ச்சை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.16, 2023
Updated on
3 min read

நவ.18-ல் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருப்பி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்ற உள்ளதால், வரும் சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

“இந்த அவசரக் கூட்டத்தில் கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவு குறித்தோ, ஆளுநர் குறித்தோ, குடியரசுத் தலைவர் குறித்தோ விவாதிக்கப்படாது. தமிழக அரசு சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியிருந்தது. ஆளுநர் அதை திருப்பி அனுப்பியிருக்கிறார். அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு விரும்புகிறது. இதனால், அவசர சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படுகிறது. அதில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும் என்பதை அரசுதான் தீர்மானிக்கும்” என்று அவர் கூறினார்.

மசோதாக்களை அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி: பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது உள்ளிட்ட நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவரும் 10 சட்ட மசோதாக்களுக்கு அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

முன்னதாக, "சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், கோப்புகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலைக்குரியது" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு: தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை வெளியிட்டார். அதன்படி 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் தகனம்: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவின் உடல் வியாழக்கிழமை தமிழக அரசு மரியாதையுடன் சென்னை - பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சங்கரய்யாவின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வழிநெடுகிலும், பொதுமக்கள், பாதசாரிகள் சங்கரய்யாவின் உடலுக்கு பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.

“விவசாயிகள் மீது குண்டர் சட்டம்... ஜனநாயகத்துக்கு முரணானது”: "தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

இதனிடையே, “செய்யாறு அருகே விளைநிலங்கள் கையப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில், கடந்த ஜுலை 2-ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

இந்நிலையில், 124-வது நாளான கடந்த 2-ம் தேதி, மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை செவிகொடுத்து கேட்காமல் செயல்படும் ஆட்சியர் பா.முருகேஷை கண்டித்து, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நியாய விலை கடை அட்டை ஆகியவற்றை செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகாவிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு: தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாஜக வெற்றி பெற்றால் அதானிக்கே வளர்ச்சி கிட்டும்”: “ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால், அதானிக்கே வளர்ச்சி கிட்டும்; ஏழைகளுக்கு எதுவும் கிடைக்காது” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

முன்னதாக, பிரச்சாரத்துக்காக ஜெய்ப்பூர் வந்த ராகுல்காந்தியை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் ஒன்றாக இணைந்து வரவேற்றனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் "நாங்கள் ஒன்றாக மட்டும் இல்லை, ஒற்றுமையாகவும் இருக்கிறோம். இருப்போம். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை வெற்றி பெரும்" என்று தெரிவித்தார்.

“சுரங்கப் பாதையில் சிக்கியோரை மீட்கும் முயற்சி தீவிரம்”: "உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் ஐந்தாவது நாளாக நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் நம்பிக்கையாக இருக்கிறோம். எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

“ஐ.நா உறுப்பு நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும்” - பாலஸ்தீன தூதர்: ஹமாஸ்- இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் நீடித்துவரும் நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்று பாலஸ்தீன தூதர் இப்ராஹிம் கிரைஷி தெரிவித்துள்ளார்.

“சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி”: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in