“அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற ஆட்சி” - நெல்லை ஓட்டுநர் மீதான தாக்குதலை குறிப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அரசு பேருந்து ஊழியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில், பணியாற்றுவது எப்படி என்ற கேள்வி அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (நவ.15) இரவு, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பேருந்தை வழிமறித்து, பேருந்தில் ஏறியவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையே நடைபெற்ற வாய்த் தகராறைத் தொடர்ந்து, அரசு பேருந்தின் ஓட்டுநர் ரெஜின் மற்றும் நடத்துநர் பாண்டி ஆகியோரை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியதில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வருகின்றன. அரசு பேருந்து ஊழியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில், பணியாற்றுவது எப்படி என்ற கேள்வி அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது. இந்த திமுக அரசு பொறுப்பேற்ற நாள்முதல் தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, அராஜகம், அடாவடி, கஞ்சா கலாச்சாரம் என சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நாள்தோறும் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள், நமக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. இதன் காரணமாக பொதுமக்களும், குறிப்பாக பெண்கள் பகலிலேயே நடமாட அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ரவுடிகளுக்கும், குண்டர்களுக்கும் காவல்துறை மீதான பயம் முற்றிலும் இல்லாமல் போனதன் விளைவே இத்தகைய செயல்கள் தொடர்வதற்கான காரணம்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை இன்று, திமுக ஆட்சியாளர்களின் கைப்பாவையாக, ஆளும் கட்சியினருக்கு வேண்டாதவர்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும், குறிப்பாக IT Wing நிர்வாகிகள் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்வதில் தீவிரம் காட்டி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க, தமிழகக் காவல்துறை பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பு வகிக்கும் திமுக அரசின் முதல்வர், காவல் துறையினை சட்டப்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in