இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி தொழில்நுட்ப அமைப்பு இயக்குநர் ஜெனரல் சச்சின் சதுர்வேதி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி தொழில்நுட்ப அமைப்பு இயக்குநர் ஜெனரல் சச்சின் சதுர்வேதி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: நம்நாட்டின் 100-வது சுதந்திர தினத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக திகழ இளைஞர்கள் பங்களிக்க வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ‘ஜி-20 இந்திய தலைமைத்துவத்தின் தீர்மானமும், உலக நாடுகளின் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

ஜி20 தீர்மானங்கள் தொடர்பான இந்த கருத்தரங்கு மூலம் உலகளாவிய வளர்ச்சியில் நமது எதிர்கால திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். உலகம் முழுவதும் தற்போது பல்வேறு சவால்கள் நிலவி வருகின்றன. வரும்காலத்தில் உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பானது முக்கியமானதாக இருக்கும்.

ஒருபுறம் அனைத்து வளங்களும் பெற்று வாழும் மக்களும், மற்றொரு புறம் அத்தியாவசிய உணவுக்காக காத்துள்ள எளிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஏழை நாடுகள், வளர்ந்த நாடுளுக்கு இணையாக மேம்பட வேண்டும். அதுவே நீடித்த வளர்ச்சி. உலகில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது போர் சூழல் நிலவி வருவதால் உலகளாவிய விநியோக சங்கிலித் தொடர் பாதிக்கிறது. இதனால் எளிய மக்கள் மிகவும் சிரமங்களை சந்திக்கின்றனர். சில நாடுகள் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்கின்றன. இதற்கு தீர்வுகள் காண வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன.

உலக பொருளாதாரத்தில் சீனா வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. ஏழ்மையான நாடுகளுக்கு கடனுதவி தந்து அங்கு தங்கள் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. உதாராணமாக நமது அண்டை நாடான இலங்கையில் சீனா உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இது அந்த நாட்டுக்கு அபாயத்தை விளைக்கும். பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

நம்நாட்டில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. கிராமம் முதல் நகரம் வரை அனைவரிடமும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. 50 கோடி ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் அரசின் நிதியுதவிகள் நேரடியாக சென்றடைகின்றன. நமது 100-வது சுதந்திர தினத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக திகழ இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்குவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி, தகவல் அமைப்பின் இயக்குநர் சச்சின் சதுர்வேதி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in