Last Updated : 19 Jan, 2018 11:35 AM

 

Published : 19 Jan 2018 11:35 AM
Last Updated : 19 Jan 2018 11:35 AM

கிடப்பில் போடப்பட்ட சர்வதேச தர ஹாக்கி மைதான திட்டம்: பயிற்சித்தளம் தேடி அலையும் கோவை வீரர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் குறைந்த செலவில் மிக வேகமாக கட்டிமுடிக்கப்பட்ட ஹாக்கி மைதானம், தற்போது சர்வதேச போட்டிகள் நடத்தும் இடமாக மாறியுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்ட கோவை மாநகராட்சி ஹாக்கி மைதானமோ பல ஆண்டுகளாக ஆரம்பக் கட்ட பணிகளோடு நிற்கிறது.

ஹாக்கி விளையாட்டில் கோவை மாவட்டம் எப்போதுமே தனி முத்திரையை பதித்துக் கொண்டிருக்கிறது. இப்போதும் கூட, உத்தரபிரதேசம், ஹரியாணா, மிசோரமில் என தேசிய அளவிலான போட்டிகளில் 5 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில அளவில் கோவை அணி தொடர்ந்து 2-ம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுதவிர, 15க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள், கிளப் அணிகள், தலைசிறந்த 9 பயிற்சியாளர்கள் என சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகின்றனர் கோவை ஹாக்கி வீரர்கள். இத்தனை சாதனைகள் இருந்தும் பயிற்சி எடுக்கவோ, உள்ளூரில் போட்டி நடத்தவோ கோவையில் தரமான ஹாக்கி மைதானம் இல்லை என்பது வேடிக்கையானது.

இந்த நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்போவதாக, மாநகராட்சி 2013-ல் அறிவித்தது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இன்றும் அது எதிர்பார்ப்பாகவே தொடருகிறது. ஆம், ரூ.5 கோடியில் திட்டமிட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் முடிந்த நிலையில், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

சர்வதேச தரத்துக்கான மூலப் பொருட்கள் அனைத்தும் காலாவதியாக நிதி முழுவதும் விரயமானது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு விளையாட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதால், பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஓரிரு நாட்களில் அதுவும் கைவிடப்பட்டது. இப்போது ஆரம்பகட்ட கட்டுமானங்கள்கூட சேதமடையும் அளவுக்கு பராமரிப்பின்றி அந்த மைதானம் விடப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த பட்ஜெட்டில் ரூ.1.5 கோடியில் ஆழ்குழாய் கிணறு, தார் சாலை, வடிகால் போன்றவை அமைத்துள்ளதாக மாநகராட்சி அறிவித்தது. ஷாக்பேடு, சின்தெடிக் டர்ஃப், கம்பிவேலி, நீர் தெளிப்பான் போன்ற அனைத்தும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ‘ஆனால் மாநகராட்சியின் அறிவிப்புகள் எதுவுமே உண்மையில்லை.

மைதானம் தயாராக மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் என கவலை தெரிவிக்கின்றனர் ஹாக்கி வீரர்கள். இங்கு மந்தகதியில் நடக்கும் பணிகள் கூட, சர்வதேச தர நிர்ணயத்துக்கு மாறானதாக இருப்பதாகவும், அது தர ஆய்வுக் கமிட்டியால் நிராகரிக்கப்பட்டுவிடும் என்றும் பயிற்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கோவை மாவட்ட ஹாக்கி சங்கச் செயலாளரும், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் பொருளாளருமான செந்தில்ராஜ்குமாரிடம் கேட்டபோது, ‘விளையாட்டில் பின் தங்கியிருந்த பல மாவட்டங்களில் கூட தரமான மைதானங்கள் இருப்பதால் இன்று முன்னேறிச் சென்றுவிட்டன. கோவையில் திறமையான வீரர்கள், பயிற்சியாளர்கள் இருந்தும் அரசின் விளையாட்டுப் பள்ளியோ, விடுதியோ, தரமான மைதானமோ இல்லை.

மாநகராட்சி உருவாக்கும் மைதானம் அந்த குறையை போக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். ஏழை, எளிய வீரர்களுக்கான இலவச ஹாக்கி அகாடமி கூட ஆரம்பித்துவிட்டோம். ஆனால், பயிற்சித் தளம் இல்லாமல் வீரர்கள் அலைமோதுகின்றனர். ஹாக்கி மைதானத்தை விரைவில் தயார் செய்து கொடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்திவிட்டோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை’ என்றார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் மாநகராட்சி நிர்வாகம், சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானத்தை விரைவாக அமைத்துக் கொடுத்தால் அது கோவை நகருக்கே பெருமை சேர்ப்பதோடு, திறமையான பல வீரர்களையும் அடையாளம் காட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x