

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த கூடாது என தனி நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால தடையை நீக்க கோரி ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த கூடாது என தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
‘அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு கட்சியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த நவ.7-ம் தேதி விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓபிஎஸ், அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என இடைக்கால தடை விதித்தார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்சியில் இருந்து என்னையும், என் ஆதரவாளர்களையும் நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட பிரதான வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என எனக்கு தடை விதிக்க முடியாது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக பெயர், கொடி உள்ளிட்டவற்றை நாங்கள் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதால், எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இடைக்கால தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் நேற்று முறையிட்டார்.
இதையடுத்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை பட்டியலிடுமாறு பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட அரவிந்த் பாண்டியன், “இந்த வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும்” என்று முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், “ஏன் இவ்வளவு அவசரம்” என்றனர். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், “கட்சி சார்ந்த எதையும் பயன்படுத்த கூடாது என தனி நீதிபதி இடைக்கால தடை விதித்துள்ளதால், நாங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (நவ.16) காலை முதல் வழக்காக இது விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.