Published : 14 Jan 2018 09:35 AM
Last Updated : 14 Jan 2018 09:35 AM

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: காளைகளை அவிழ்த்துவிட வாடிவாசல் தயார்

மதுரை அவனியாபுரத்தில் இன்று (ஜன. 14) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதைத் தொடர்ந்து முதலில் நடைபெறும் போட்டி என்பதால் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. முதற்கட்டமாக இன்று (ஜன. 14) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள 624 மாடுபிடி வீரர்களும், 967 காளைகளும் முன்பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க கால்நடை பராமரிப்புத் துறையினர் டோக்கன் வழங்கியுள்ளனர். காளைகளை அவிழ்த்துவிட வாடிவாசல் அமைத்து அதற்கு வெள்ளையடித்து பூஜைகள் செய்து விழா ஏற்பாட்டாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மதுரையில் முதல் போட்டி

மதுரையில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும், இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்பர். அதனால், அவனியாபுரத்தில் வெற்றிபெறுபவர்கள், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதிய உத்வேகத்துடனும், ஆரவாரத்துடனும் பங்கேற்பர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், பீரோ, மின்விசிறி, பாத்திரங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட வகையான பரிசுப் பொருட்கள் காத்திருக்கின்றன. சிறந்த மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க சிறப்பு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து மாடுபிடி வீரர்கள், காளைகள் பங்கேற்க உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாடிவாசலில் ‘சிசிடிவி கேமரா’

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு முதல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் வாடிவாசல் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போட்டிகளை போலீஸார் தனி அறையில் அமர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாடிவாசலில் அந்நிய நபர்கள் நுழைவதைத் தடுக்கவும், சீருடைகள் அணிந்த மாடுபிடி வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் ஜல்லிக்கட்டு களத்தில் குதித்தால் அவர்களை வெளியேற்றவும், காளைகளை துன்புறுத்தும் மாடுபிடி வீரர்களை வெளியேற்றவும் இந்த ‘சிசிடிவி’ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டியை முழுமையாக கேமராவில் பதிந்து சட்டச் சிக்கல் ஏற்பட்டால் அவற்றை ஆதாரமாகக் கொண்டு வழக்குகளை சந்திக்கவும் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அதற்காக இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் அருகே 4 இடங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x