Published : 16 Nov 2023 05:07 AM
Last Updated : 16 Nov 2023 05:07 AM

பாமக பைக் பேரணியை அனுமதிக்காமல் திமுகவுக்கு மட்டும் அனுமதி அளித்தது நியாயமா? - காவல் துறைக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை: பாமகவின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி வழங்காத காவல் துறை திமுகவின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி அளித்தது எந்த வகையில் நியாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் இளைஞரணி மாநாட்டையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,647 கி.மீதொலைவுக்கு இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. வரும் 27-ம்தேதி வரை மொத்தம் 13 நாட்கள்நடைபெறும் இந்த பேரணியில் 188இருசக்கர வாகனங்கள் பங்கேற் கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் அரசியல் கட்சியின் கொள்கையை விளக்குவதற்காக இத்தகைய பேரணிகள் நடத்தப்படுவது இயல்பானது; தேவையானது. ஆனால், பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக காவல் துறை இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்?

மதுவிலக்கை வலியுறுத்தி பேரணி: தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உன்னத கொள்கையை வலியுறுத்தி, கடந்த அக். 5-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர்பகுதிகளில் இருசக்கர ஊர்தி பேரணிகளை நடத்தும்படி பாமகவினருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். பேரணியில் அதிக அளவாக 50 வாகனங்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பேரணி நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தேன்.

ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி, பாமகவின் இருசக்கரவாகன பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த தமிழக காவல் துறை, இப்போது தமிழகம் முழுவதும் திமுகபேரணி நடத்த அனுமதி அளித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்.

ஓர் அரசியல் கட்சியின் மாநாடுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் பேரணியை விட, மதுவிடமிருந்து மக்களைக் காப்பதற்காக நடத்தப்படும் பேரணி மிகவும் முக்கியமானது. ஆனால், மதுவிலக்கு பரப்புரைக்கான பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்ட காவல் துறை, இப்போது கட்சி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பேரணிக்கு அனுமதி வழங்கியிருப்பது சரியில்லை.

காவல்துறை பொதுவானது: திமுகவுக்கு ஒரு நீதி. பாமகவுக்கு ஒரு நீதியா? தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக் கூடாது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பாமகவின் இருசக்கர ஊர்தி பேரணிக்கு தமிழக காவல் துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x